Monday, November 16, 2009

வலிக்கச் செய்த வரிகள்

ப்ளாக் எழுத வந்து இரண்டாண்டுகள் முடிந்து விட்டன.
எனது அறிமுகப் பக்கம் எழுதிய நாள் 25 அக்டோபர் 2007
இதுவரை வெறும் 30 மட்டுமே பதிந்துள்ளேன்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பருக்குப் பின் ப்ளாக் எழுதுவதையே நிறுத்தி விட்டேன். ஒவ்வொரு முறையும் எழுதலாம் என்று தோனும் போது ஏதோ ஒன்று என்னை மௌனிக்க வைத்தது.

ஈழப்போர் ஏற்படுத்திய காயங்களும், அதை விட அதை எழுதுகிறோம் பேசுகிறோம் என்ற பெயரில் பலர் செய்த சுயநல அரசியலும் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்பதில் எனக்கொரு தேக்கத்தைக் கொடுத்தது.

2001 செப்டம்பருக்குப் பின் உலக அரசியலின் தளம் முற்றிலுமாக மாற்றப்பட்டுவிட்டது.

புஷ் சொன்னார்: ‘‘நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் அவர்களுடன் இருக்கின்றீர்கள்”

கிட்டத்தட்ட இதையே நடுநிலைவாதிகளும் ஏற்றுக் கொண்டது போல் உலக ரவுடி அமெரிக்காவின் அட்டூழியங்களுக்கு ஆதரவளித்தனர் - ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற ரீதியில்.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை பார்த்து எல்லோரும் மௌனம் காத்தனர். காரணம் கொல்லப்படுபவர்கள் “பயங்கரவாதிகளாம்”. அவர்களுக்கென குரல் கொடுப்பவர்களும் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டனர்.

2001 செப்டம்பருக்குப் பின் உலகமே இப்படித்தான் சிந்தித்தது “நீங்கள் எங்களுடன் (அமெரிக்காவுடன்) இல்லையென்றால் அவர்களுடன் (பயங்கரவாதிகளுடன்) இருக்கின்றீர்கள்”

இதற்கு கொஞ்சமும் விதிவிலக்கின்றி ஈழத் தமிழர்களின் போரும் போராட்டமும் மாற்றப்பட்டது.

ஈழத் தமிழர்களின் துன்ப துயரங்களுக்காக குரல் கொடுப்பவர்கள் பயங்கரவாதி விடுதலைப் புலிகள் என சிங்கள பேரினவாத அரசு கருதியது. விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழீழத்திற்கு எதிரானவர்கள் என இங்குள்ள (இந்தியாவிலுள்ள) வர்கள் எண்ணினர். இதுவும் இந்த “நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் அவர்களுடன் இருக்கின்றீர்கள்” என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான்.

சிங்கள பேரினவாதம் ஈழத் தமிழர்களை ஒடுக்கியது. யாழ்ப்பாண சாதிய உணர்வு தலித்துகளை ஒடுக்கியது. தமிழ்த்தேசிய உணர்வு முஸ்லிம்களை ஒடுக்கியது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கா (அவர்கள் யாராக இருந்தாலும்) குரல் கொடுக்க மறுப்பவர்களை ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகள் என்றுதானே கூறமுடியும்?

ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருப்பவர்கள் யாராலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை எவ்விதத்திலும் பெற்றுத் தந்து விடமுடியாது.

எனவேதான் யாருக்காகப் போராடுகிறோமே அவர்களையே இயக்க விரோதிகள், துரோகிகள், சமூக விரோதிகள், திருடர்கள் என இன்னோரன்ன காரணங்களைக் கூறி புலிகளால் கொல்லவும் கொல்லக் கொடுக்கவும் முடிந்தது. தங்களது சிறையில் அடைத்து நாயினும் கீழாக வதைக்க முடிந்தது. தங்களுக்கு இனி வழியே இல்லை என்ற நிலை வந்தபோதும்கூட ஆயிரக்கணக்கான மக்களைத் தங்களுடன் தடுத்து வைத்திருந்து சிங்கள ராணுவத்திற்கு இரையாக்கிய கொடுமையும் நிகழ்ந்தது.


இரண்டு நாட்களுக்கு முன் “ஈழம்: மௌனத்தின் வலி” என்றொரு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சத்குரு ஜக்கி வாசுதேவ், நக்கீரன் கோபால், நடிகர் சிவக்குமார், நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர் முருகதாஸ் உட்பட பலர் உரையாற்றினர்.

இந்நிகழ்வுக்கு தாமதமாகவே செல்ல நேர்ந்தது.

பொதுவாக ஈழம் தொடர்பான எந்த நிகழ்வுகளுக்கும் - அங்குள்ள அசிங்கமான அரசியலால் மனம் வெதும்பி - செல்வதைத் தவிர்த்து வந்தேன்.

மனித உரிமை ஆர்வலர்கள் நடத்தும் கருத்தரங்கங்களுக்கு செல்வதுண்டு.
இதுபோன்ற கருத்தரங்கங்களில் கலந்து கொள்பவர்களை எண்ணி விடலாம்.

14/11/2009 அன்று நடைபெற்ற அந்த நூல் வெளியீட்டு விழாவும் அப்படித்தான் இருக்குமென்று நினைத்துச் சென்றால் ஆச்சரியம் கூட்டம் அலைமோதியது. கடும் மழையையும் கணக்கில் கொள்ளாது காட்டாற்று வெள்ளம் போல் மக்கள் திரள். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் யார் என்றாவது பார்த்துவிட வேண்டும் என்று சிரமப்பட்டு உள் சென்றேன்.

இதில் பிரகாஷ்ராஜ் சில யதார்த்தமான நடுநிலையான கருத்துக்கள் சிலவற்றைக் கூறினார்.

“ஈழத்தமிழர்கள் பாதிக்கப்படும் போது இங்கு (தமிழகத்தில்) நடப்பது இரண்டு
1. எல்லோரும் கூச்சல் போட ஆரம்பித்து விடுவார்கள். அந்தக் கூச்சலில் யார் என்ன சொல்கிறார்கள் என்பதே தெரியாமல் உண்மை மறைந்து விடுகிறது.
2. எல்லோரும் மௌனமாகிவிடுகிறார்கள்.
ஆனால் எத்துணைக் காரணங்களைக் கூறினாலும் இதில் மௌனம் சாதிப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று” இவ்விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ் கூறினார்.

(இந்த வார்த்தைகள்தான் என்னை இந்தப் பதிவை எழுத வைத்தது.)

“என் இனம்
என் மதம்
என் மொழி
என் உறவு
என் நிலம்
இதற்காகத்தான் நான் பேசுவேன். இதற்காக மட்டுமே நான் மேடையேறுவேன் என்று யாராவது சொன்னால் அவன்தான் உண்மையான பயங்கரவாதி”

பிரகாஷ் தமிழரா என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழர் இல்லையென்றே நினைக்கிறேன். எனவே இவருக்கு முன் பேசிய நக்கீரன் கோபாலின் பேச்சு இவரைப் பாதித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அதனால்தான் வந்தவுடன் “நான் இந்த மேடையில் பேச வந்தது நான் ஒரு மனிதன்’ என்ற முறையில்தான்” எனக் கூறினார்.

நான் போகும் போது நக்கீரன் கோபால் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்.

எங்கே செல்லக்கூடாது என எண்ணியிருந்தேனோ அங்கே வந்துவிட்டோமோ என்ற நினைப்பை அவர் பேச்சின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுத்தினார்.

“அங்கே கொல்லப்படுபவர்கள்
சீக்கியர்கள் அல்ல
இந்திக்காரர்கள் அல்ல
மராட்டிக்காரர்கள் அல்ல
வெள்ளைத் தோலுடையவர்கள் அல்ல
ம் ஏதோ சொல்கிறார்களே ஃபாசிஸ் அவர்களும் அல்ல.
நம்முடைய இனத்து நம்முடைய மொழிக்காரர்கள்”

என்பது போன்று நிறைய கூறினார்.

இதில் கவனிக்க வேண்டியது ஃபாசிஸ்டுகள் என்பதைக்கூட முழுமையாகச் சொல்வதற்கு அவருக்கு நா எழவில்லை. அதற்கான தைரியமும் தெம்பும் இல்லை.

இப்படி ஏகப்பட்ட அபத்தங்களுடன் நடந்து கொண்டிருந்த விழாவில் அதற்கு மேல் நிற்க சக்தியின்றி வெளியேறினேன்.

வரும்போது மறக்காமல் அவர்கள் வெளியிட்ட புத்தகத்தையும் வாங்கினேன்.

தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்க வேண்டிய நூல் எனக்கூறினார்கள்.
மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் வாங்க வேண்டிய நூல்அது.

ஆனால் மனிதநேயம் உள்ள யாராலும் அந்த நூலை முழுமையாக ஒரே நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட முடியாது. ஈழத்தமிழர்கள் அடைந்த துயர்ங்களின் மிச்சங்களை மட்டுமே ஆவணப்படுத்தியுள்ளார்கள். அதையே பார்க்க முடியவில்லை. அவ்வளவு வலி. பார்க்கும் நமக்கே இவ்வளவு வலி என்றால் பட்ட அவர்களுக்கு?

வெளியே வரும்போதுதான் இவ்வளவு கூட்டத்திற்கான காரணம் தெரிந்தது.

தெருவில் அங்குமிங்கும் அலைமோதிக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார் “சத்குரு ப்ரோக்ராம் எங்க நடக்குது?”

நான் சொன்னேன் “இது சத்குரு ப்ரோக்ராம் இல்லை, ஈழத் தமிழர்களுக்கான நிகழ்ச்சி”

இரு இளைஞர்கள் வேகமாக பைக்கை நிறுத்தி விட்டு “நம்ம தல வந்துருக்காரா” ன்னு கேட்டாங்க

யாரு நம்ம தலன்னு திருப்பிக் கேட்டதுக்கு, நம்ம ஏ.ஆர். ரஹ்மான்தான் எனக் கூறினர்.
இல்லை வரவில்லை எனக்கூறி என் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினேன்.

இப்படி ரஹ்மானுக்காகவும், பிரகாஷ் ராஜுக்காகவும், என்பார்வையில் அதிகமானோர் “சத்குரு”க்காகவுமே இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.


வாங்கிய புத்தகத்தை இப்பொழுதுதான் பார்த்து முடித்தேன்.
வாங்கியதிலிருந்து பார்க்க ஆரம்பித்தாலும் முழுமையாக பார்க்க முடியவில்லை. அதுதான் பதிவு தாமதமானதற்கும் காரணம்.

இந்நூலில் ஒரு கவிதை

ஒற்றைப் பிணத்திற்காக
தோண்டிய குழிக்குள்
ஒரு தேசத்தைப்
புதைத்துவிட முடியாது.
- கவிஞர் சரவணகுமார்

முடியாது என சரவணகுமார் எழுதியுள்ளார்.
ஒற்றைப் பிணத்திற்காக (பிரபாகரணுக்காக) தோண்டிய குழிக்குள்தானே ஒரு தேசத்தையே புதைத்து விட்டார்கள் பாவிகள்.


இனி அந்த நூலிலிருந்து ஒரு சில படங்களும் கவிதைகளும் உங்களுக்காக.இன்னும் கொஞ்சம் தோண்டு...
இந்த மண்ணில்
ஈரம் இருககிறதா என்று பார்ப்போம்!
- இயக்குநர் லிங்குசாமி

உறவைத் தின்று
ஊரைத் தின்று
இனத்தையே
தின்று முடித்து இருக்கிற
இம்மண்ணுக்குப்
பச்சை மண்
எம்மாத்திரம்?
- கவிஞர் வெண்ணிலா

என்னை வலிக்கச் செய்த வரிகளை இவை.

“இவர்கள்
எங்களை
வளைத்தபோது வலிக்கவில்லை
துளைத்தபோது வலிக்கவில்லை
சிதைத்தபோது வலிக்கவில்லை
எரித்தபோதும் வலிக்கவில்லை
அங்கே
நீங்கள் எதுவுமே செய்யாமல்
இருந்தபோதுதான்
வலித்தது அதிகமாய்
அதிக அதிகமாய்...
- கவிஞர் மு. மேத்தா

ஆம்!
மௌனத்தின் வலி
கொடூரமானது.

- என்றும் அன்புடன்
உங்கள் புகழன்

9 comments:

ஆயில்யன் said...

வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!

இது போன்று நிகழ்வுகள் - தனித்துவிடப்பட்ட ஈழ மக்களுக்கு - ஆதரவுக்கரம் நீட்டும் நிகழ்வாக நீளட்டும்!

ஆயில்யன் said...

வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!

இது போன்று நிகழ்வுகள் - தனித்துவிடப்பட்ட ஈழ மக்களுக்கு - ஆதரவுக்கரம் நீட்டும் நிகழ்வாக நீளட்டும்!

ஆயில்யன் said...

வலிக்க செய்த வரிகளினை மனதோடு மனதாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!

இது போன்று நிகழ்வுகள் - தனித்துவிடப்பட்ட ஈழ மக்களுக்கு - ஆதரவுக்கரம் நீட்டும் நிகழ்வாக நீளட்டும்!

தருமி said...

உங்களின் உண்மையான ஆதங்கத்தில் நானும் பங்கேற்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

ரொம்ப நாளைக்கப்புறம் எழுத வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

இந்தப் பதிவைப்பத்தி எதுவும் சொல்லும் மனசு இல்ல. வலிக்கச் செய்த வரிகள்னு ஆயில்யன் சொல்லியிருப்பது மிக மிகச்சரி.

வால்பையன் said...

பிரகாஷ்ராஜ் கன்னடத்துக்காரர்!

ஆனால் அவரைப்போல் தமிழ் பேச முடியாது!

cheena (சீனா) said...

கவிதைகள் படங்கள் அத்தனையும் அருமை

சிந்தனை சிறந்தது - நல்வாழ்த்துகள்

சுகுணாதிவாகர் said...

நீங்கள் பதிவின் முற்பகுதியில் கூறியுள்ள விஷயங்களைக் கூற துணிச்சல் வேண்டும்.

Rathi said...

கட்டுரையாளருக்கு,

என்னை என் மனதை, என் உணர்வுகளை வலிக்கவைக்கிற உங்களின் வரிகள் இவை. //ஒற்றை பிணத்திற்காக (பிரபாகரனுக்காக)....// இப்போதெல்லாம் பறிகொடுத்த எங்களை விட பார்த்துக்கொண்டிருந்த சிலருக்கு புத்தகம், கட்டுரை வடிவிலும் வலிப்பதுதான் எனக்கு வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. இதில் பிரபாகரனை பிணம் என்று வேறு ஒரு சொற்பதம். விமர்சனப்பொருளாக பிரபாகரனைப் பார்க்கும் உங்களை போன்றவர்களுக்கு எங்களின் வலி புரிய நியாமில்லை தான்.