Monday, August 22, 2011

சென்னைல அப்படி என்னதான் இருக்கோ தெரியலையே....

இன்று சென்னை தினம்.
இது எந்த தினம்? இந்த நாளின் பின்னணி என்ன என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

சென்னை என்றாலே அது உருவான நாள் முதற்கொண்டு எல்லோருக்கும் ஒருவித ஈர்ப்பை உண்டாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா.
“அடுத்த வருடமே அம்பானியாகிவிடலாம்” என்பது போன்ற பற்பல கனவுகளில் இன்றும் பலர் சென்னைக்கு இடம் பெயர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வந்த பின் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டாலும்கூட ஏனோ சென்னையை விட்டு விட்டு திரும்பிச் செல்லாமல் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்று சென்னையிலேயே இருந்து விடுகிறார்கள். பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்று நன்கு தெரிந்தும், சென்னையின் பலவித சிக்கல்கள், தொல்லைகள், போக்குவரத்து நெரிசல், ஏமாற்றுதல்கள், பித்தலாட்டங்கள், போட்டி, பொறாமை, வேலையின்மை, விவேக் காமெடியில் சொல்வது போன்று காலித்தனம் செய்யும் போலிச் சாமியார்கள், நாஸ்தி செய்யும் வாஸ்து சாஸ்திரம் சொல்பவர்கள்,
இப்படி என்னற்ற சங்கடங்கள் மனதில் இருந்தும், சென்னையை எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டாலும் பண்டிகை விடுமுறைகளில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு அங்கே இருந்து விடலாம் என்று மனம் சொன்னாலும் ஏனோ அதையும் தாண்டி சென்னை விட்டு அகல முடியாத நிலை பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

சென்னைல அப்படி என்னதான் இருக்கோ தெரியலையே....

எனக்கும் இதே ஃபீலிங்ஸ்தான் மக்களே. சென்னைக்கு வந்து 8 வருடங்களாகி விட்டது. ஆனால் இன்னும் சென்னையை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் சென்னை என்னை விடமாட்டேன் என்கிறது.