Wednesday, May 14, 2008

“ஏண்டா எனக்குப் பின்னாடி பொறந்த?”

அத்தை மகள்.
முதல் முறையாக அவள் என்னை இழுத்து நிற்கவைத்து, “ஏன்டா எனக்குப் பின்னாடி பொறந்த?” என்று கேட்டபோது, எனக்கு வயது பதினொன்றிருக்கும். அவள் பத்தாவது எழுதியிருந்தாள். அவள் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல், அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கத்தான் தெரியும் அப்போதெனக்கு.
சும்மா பார்த்துக் கொண்டு நிற்கிற என் கண் முன்னேயே அவள் வளையல்களையெல்லாம் கழற்றி, என் கையில் திணித்து
“போட்டு விடு” என்று கைகளை நீட்டிக் கொண்டு நிற்பாள்.
சின்னச் சின்னதாக ஈரம் ஒட்டியிருக்கிற உடையில் என்னை வந்து எழுப்பி... காபி கொடுப்பாள். குடித்துக் கொண்டிருக்கையில்
பிடுங்கிக் குடிப்பாள்.
குளித்துவிட்டு வருகிற என்னை அருகில் வைத்துத் தலை துவட்டி விடுவாள்.
“ஏண்டி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டுப் பொறந்த... பொறுத்துப் பொறந்திருந்தா இந்த வீட்டுக்கே
ராணியாயிருக்கலாமில்ல...” அம்மா அவளிடம் சொல்லும்போதெல்லாம் அவள் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். அது
சிரிப்பில்லை என்பது எனக்குப் புரிய ரெம்ப வருடங்களானது.
அவள் கடைசியாக இங்கு வந்திருந்தபோது, நான் பத்தாவது எழுதியிருந்தேன். எப்போதும் இருக்கிற உற்சாகம் இல்லாதவளாக
இருந்தாள். அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்கவே முடியவில்லை.
“ஏன்டி உம்முனு இருக்கே வந்ததிலேர்ந்து?” - கேட்டது அம்மா.
“இல்லையே... நால்லாதானே இருக்கேன்...” அவள் சொல்லி முடிப்பதற்குள் அம்மாவை யாரோ கூப்பிட்டார்கள்.
அம்மா போனதும், “நீ கேட்கமாட்டியா, ஏன் உம்முனு இருக்கேனு” என்றாள் என்னைப் பார்த்து.
நான் பேசாமல் அமைதியாக அவள் முகம் பார்த்து நின்றேன்.
“எனக்குக் கல்யாணம் ஆகப் போகுதுடா...’’
அப்போதும் அப்படியே நின்றிருந்தேன்.
“உங்கிட்ட போய்ச் சொன்னேனே” - நெற்றியில் அடித்துக் கொண்டு போனாள்.
அப்புறம் சத்தமற்றவளாக சில நாள் இருந்துவிட்டு, ஊருக்குக் கிளம்பும் அன்று...
நான் முற்றத்தில் காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தேன். கொலுசுச் சத்தத்துடன் என்னருகில் வந்து நின்றாள்.
“டேய்... இந்த வீட்டில் உனக்குப் பிடிச்ச இடம் எதுடா?” என்றாள்.
பீரோவின் பக்கத்தில் இருக்கிற இருட்டைக் கைகாட்டினேன்.
என் கையைப் பிடித்து இழுத்துப் போய் அங்கே நிற்க வைத்து... கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். தன் இரு கைகளாலும் என் முகத்தை ஏந்தி, “ஏண்டா எனக்குப் பின்னாடி பொறந்த?” கேட்டபோது, என் முகத்தில் சில சொட்டுக் கண்ணீர் விழுந்தது. சட்டென்று விலக்கிவிட்டுப் போய்விட்டாள்.
காலத்தின் போக்கில், அந்த நேர அற்புதம் நெஞ்சில் ஊற ஊற... அதன் அர்த்தம் விளங்க விளங்க... என் முகத்தில் சிந்திவிட்டுப் போன அவளின் கண்ணீர் துளிகளில் கரைந்துகொண்டிருப்பேன் அந்த இடத்தில். அவள் இங்கிருந்து போயிருந்தாலும், எனக்கான
அவளை மட்டும் விட்டுவிட்டுப் போயிருந்தாள் அந்த இருட்டின் வெளிச்சத்தில்.


தபூ சங்கருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமோ இல்லையோ. அவர் கற்பனையில்கூட இப்படி எழுதியிருக்கலாம்.ஆனால் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதெல்லாம் (இதை மட்டும் அடிக்கடி எடுத்துப் படிப்பேன்) எனக்கு என் பழைய நினைவுகள் வந்துவிடும்.

என் அக்கா மகள்.

தூரத்து உறவுதான். ஆனால் பக்கத்து வீடு. அவர் வீட்டுக்கு நான் போகும்போதெல்லாம் என் அம்மாவிடம்
“கொஞ்சம் பெரிய பையனா இருந்தா நானே கட்டிக்கொள்வேன்” என்று கூறுவார்கள்.

என் அம்மாவிற்கு மொத்தம் 5 அண்ணன்கள் 1 தம்பி. சிலநாட்கள் கழித்து 10வது முடித்து மேலும் படிக்க வெளியூர் சென்று ஒருநாள் விடுமுறையில் திரும்பி வரும்போது என் அம்மாவின் தம்பிக்கு (என் மாமா)
திருமணம். எனக்கு அத்தையாக வந்தது ‘என்னைக் கட்டிக்கொள்கிறேன்’ என்று கூறிய என் அக்காவின் மகள்தான். என்னை மாமா என்று கிண்டலுக்காக அழைத்த அவங்க இன்று எனக்கு அத்தை. ஆனால் அப்படியே மாறாமல் இன்னமும் மாமா
என்றே அழைப்பார்கள். எனக்கே சங்கடமாக இருக்கும். என் ஆறு அத்தைகளை விட இவர்கள்தான் என் மீது அதிக அன்புடன்
இருப்பார்கள். மாமா வீட்டிற்கு சென்றால் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்கள். ஹோட்டல், பார்க், பொருட்காட்சி, சினிமா என்று
எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வேன் என்று பிடிவாதமாக இருப்பார்கள். (அப்போதும் எனக்கு சின்னவயதுதான்). ஒருநாள் எங்க மாமா வீட்டில் ஒரு ஃபங்ஷன். எல்லா மாமா அத்தைகளும் ஒன்றாக இருக்கும் போது பேச்சு அவர்களின்
பிள்ளைகளைப் பற்றி போனது. எங்க வீட்டுலதான் உங்க மகனுக்கு பொண்ணு கட்டனும் என்று எல்லா அத்தையும் போட்டி
போட்டுக் கொண்டு சொன்னபோது, என் அக்கா மகள் என் அத்தை என்னிடம் “இங்க பாரு... என் மகளத்தான் நீ கட்டிக்கனும்.
இல்லை நடக்குறதே வேற” என்று ரெம்பவே சீரியஸாகக் கூறினார்கள். பின் பேச்சு வேறு பக்கம் சென்று எல்லோரும் இந்த
டாபிக்கையே மறந்து விட்ட நிலையிலும் எல்லோரும் சென்ற பின் என் அக்கா மகள் என்னிடமும் என் அம்மாவிடமும்
கூறினார்கள். என் மகளை நீ தான் கட்டிக்கனும். அதற்கு எம் அம்மா அவனுக்கே 17வயது
ஆகிவிட்டது இனிமேல் நீ பிள்ளை பெற்று அவளை கட்டிக்கவா? இதெல்லாம் நடக்குற காரியமா? சும்மா பேச்சுக்கு கிண்டல்
பண்ணு சரி. ஆனால் நீ ஏன் இவ்வளவு சீரியஸாகப் பேசுற

ஒரு நாள் லீவில் வந்திருக்கும் போது என் அம்மா சொன்னார்கள். மாமிக்கு கர்ப்பப்பையிலே கேன்சராம். ஆபரேஷன்
செய்தால்தான் பிழைக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். ஆனால் இது மாமிக்கு தெரியாது என்று சொன்னார்கள். அத்தையைப் பார்க்க மாமா வீட்டிற்கு சென்றபோது ஹாஸ்பிடல் சென்று கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் என் மாமி
கூறினார். “நான் கர்ப்பமாயிருக்கேன். எனக்கு கண்டிப்பாக பொம்பளப் பிள்ளைதான் பிறக்கும். நீதான் கட்டிக்கனும்.” என்று
சொன்னபோது எனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொள்ள ரெம்பவே கஷ்டப்பட்டேன். கடைசிநேரம் வரை கர்ப்பப்பையை எடுக்க சம்மதிக்காமலேயே இறந்து விட்டார். என் நினைவில் நின்றவர்களில் முதலிடம் அவருக்கு மட்டுமே என்றும்.

Friday, May 9, 2008

+2 தேர்வு முடிவுகள் 2008 ஒரு பார்வை

தேர்வு முடிவுகள் பற்றி விரிவான பதிவு 10 மணிக்கு பதியப்படும் எதிர்பாருங்கள் என்று அறிவிப்பு செய்து விட்டேன்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு.
ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டேன். பின்புதான் தெரிந்தது இது எவ்வளவு கஷ்டம் என்று.
முன்பெல்லாம் 10, 12 ன் தேர்வு முடிவுகளை அறிவதற்காக ரெம்பவே கஷ்டப்பட்டிருக்கின்றோம்.
மாலை பேப்பரில்தான் முதலில் முடிவுகள் வெளியாகும்.
அன்றைய மாலை மலர் (அ) மாலை முரசு அமோக விற்பனையாகும்.
12, 1 மணிக்கெல்லாம் கடைக்காரரிடம் நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள் அண்ணே பேப்பர் வந்திருச்சா? அண்ணே பேப்பர் வந்திருச்சா? என்று.
அதில் முடிவுகளைப் பார்த்தாலும் தேறாத மாணவர்கள் ஏதாவது பிரிண்டிங் மிஸ்டேக் இருந்திருக்கும் நாளை காலை பத்திரிகையில் இறுதிமுடிவு வரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் சிலர்.
இன்டர்நெட் வந்த பிறகு எல்லாமும் ரெம்பவே சுலபமாகி விட்டது.
அது சரி இந்த வருட ரிசல்ட் பற்றி சில குறிப்புகள்.
கடந்த வருடங்களைப் போலல்லாமல் இந்த வருடம் வெற்றிபெற்றவர்களின் சதவிகிதம் அதிகரி்த்துள்ளது.
முதல் இரண்டு இடத்தைப் பெற்றவர்கள் ஆண்கள் - பெண்களும்தான்.
1182
1181

முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்கள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்தவர்கள் என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

கணிதவியல் கவிழ்த்து விட்டது. நிறைய பேர் அதில்தான் தோல்வியுற்றுள்ளனர்.

தோல்வியுற்றவர்கள் ஒருமாதத்திற்குள் மறுதேர்வு எழுதலாம்.
இது போன்ற வசதி முன்பு இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு வருடமே வேஸ்ட்டாகும் நிலை மிக வருத்தத்திற்கு உரியது.
கல்வித்துறை இதுபோன்ற நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அப்படியே கல்விமுறையையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவி்ட்டால் நல்லது.

சிறு வயதிலிருந்தே நீ என்னவாகப் போற? என்று கேட்டு கேட்டு (தன் கருத்தைத் தினித்து, சுய விருப்பத்தைத் தொலைத்த) குழந்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் பெற்றோர்கள்.
எங்க மாமா மகன் ஒருத்தன்ட நீ இன்ஜினியராக ஆகனும் என்று கூறியே வளர்த்தனர். அவன் 10வது வந்ததும் “அசோகர் மரம் நட்டதும், கஜினி முஹம்மது படையெடு்த்ததும் படிச்சா எப்படி இன்ஜினியர் ஆக முடியும்”னு கேட்டான்.
நல்ல கேள்விதான்.

இந்த வரலாறையெல்லாம் 10வது வரை படிச்சுக் கொடுக்கனுமா?

அப்புறம்................................

+2 என்பது பள்ளி இறுதிதானே தவிர கல்வி இறுதியல்ல.
இதை நிறைய பேர் தவறாக விளங்கி படிப்பை நிறுத்தி விடுகின்றார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு முதலில் 8வது வகுப்போடு நிறுத்தினார்கள். பின் 10வது வகுப்புடன் நிறுத்தினார்கள். தற்போது +2 உடன் நிறுத்தி விடுகின்றனர்.
கல்விக்கு எந்த வரம்பும் இன்றி விருப்பப்படி படிக்க வைக்க வேண்டும். படிக்கும் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தூண்ட வேண்டும்.

அடுத்த முக்கியமான விஷயம், கற்றல் என்பது இன்று வேலைசெய்வதற்கும் சம்பாதிப்பதற்கும் என்று ஆகி விட்டது. கற்பித்தல் என்பது வியாபாரமாகிவிட்டது.
அறியவேண்டும் என்பதற்காக கற்க வேண்டும். ஆராய வேண்டும். அப்படிப்பட்ட தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் இந்தக் கல்வியாண்டிலிருந்து உறுதிஎடுப்போம்.
என்றும் மனதோடு மனதாய்...
உங்கள் புகழன்

பிளஸ் டூ ரிசல்ட் - வாழ்த்துகள்

தேர்வில் பங்கேற்று
வெற்றிபெற்ற அனைவருக்கும்
வாழ்த்துகள்


மனதோடு மனதாய்
வாழ்த்துவது
உங்கள் புகழன்
(குறிப்பு: தேர்வு முடிவுகள் பற்றி விரிவான பதிவு சென்னை நேரப்படி இன்று இரவு 10. மணிக்கு.... காத்திருங்கள்)

Wednesday, May 7, 2008

என்ன பதில்?

மலராத மொட்டே -
நீ பூக்க மாட்டாயா?

கசந்துவிட்ட கனியே -
நீ இனிக்க மாட்டாயா?

வளராத செடியே -
நீ உயரமாட்டாயா?

அணையாத விளக்கே -
நீ ஒளிரமாட்டாயா?

வாய் மூடிய குயிலே -
நீ கூவ மாட்டாயா?

வலுவிழந்த காற்றே -
நீ வீசமாட்டாயா?

இறங்காத மழையே -
நீ பொழியமாட்டாயா?

தளர்ந்து விட்ட அறிவே -
நீ உணர மாட்டாயா?


என்ன ஆயிற்று உங்களுக்கு?
காரணமென்ன தடைகளுக்கு?

நீங்களும் இன்று வேலை நிறுத்தமா?!

உங்கள் இயக்கம் எங்கே?
அகிலம் இருளுகிறது இங்கே!

பதில் ஒன்றைத் தாருங்கள் - இல்லையேல்
அழிந்து சாகுங்கள்!

தொடுத்த வினாக்களுக்கு
கிடைத்த விடை -
ஒரே விடை -

“மனிதனே இன்று அழிவுப் பாதையில்...
நாங்கள் மட்டும் ஏன் நேர் பாதையில்.....?”