Monday, February 18, 2008

படிப்பாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்

படிப்பாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்
கதை நன்றாக இருந்தால் உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்
இல்லையெனில் என்னிடம் கூறுங்கள்.
இப்படிக்கு
உங்கள் புகழன்

காட்டு மிராண்டி

என் நண்பன் நல்ல படிப்பாளி. சிறந்த படைப்பாளியும் கூட. ஆனால் அவனது படைப்புகள் பல அவனின் காகிதங்களிலேயே புதைந்து விட்டது. எழுதிய சிறுகதைகள் பல. ஆனால் வெகு ஜன இதழ்களில் எதிலும் அவனுடைய படைப்புகள் வெளிவர வில்லை. ஒன்றைத் தவிர. இந்தப் பதிவில் வரும் கதை மட்டும் தினமணி கதிர் இதழில் ஒரு முறை வெளிவந்தது.
அந்த இதழ் இப்போது என்னிடம் இல்லை. ஆனால் அவன் எழுதிய காகிதங்கள் கிடைத்தது. அதை இங்கு பதிக்கிறேன்.
இனி கதை...
காட்டு மிராண்டி!
“அவன் என்ன கொம்பனா? அவன கொல்லாம விடமாட்டேன். எங்கடி என்னை கொண்டு போறே... விடுறீ... அவன ஒரு கை பார்க்குறேன்...”
மூச்சிறைக்க மேகரலை கத்தினாள். தொடர்ந்து உளறிக் கொண்டே இருந்தாள். கூட்டம் முழுவதும் அவளையே திரும்பிப் பார்த்தது.
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மேகலையின் தங்கை ராஜேஸ்வரி அவளின் உளறலை குறைக்க முயற்சி செய்தாள்.
மேகலை ரயிலின் வாசலில் உட்கார வைக்கப்பட்டிருந்தாள். கால்களும் கைகளும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. மொட்டையடிக்கப்பட்ட தலை. ஐம்பது வயதிருக்கும்.
ரயிலின் அந்தப் பெட்டி முழுவதிலுமே நிசப்தம் நிலவியது. சிலர் முணுமுணுத்தனர். இன்னும் சிலர் அவளை அசூசையாகப் பார்த்து விலகி நின்றனர்.
மனநோய் முற்றிய நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துமனைக்கு அவளை அழைத்துச் செல்லும், தங்கை ராஜேஸ்வரி கொஞ்சம் படித்தவள் போல் காணப்பட்டாள்.
“ஏம்மா, உனக்குமா அறிவில்லை? அவதான் பைத்தியம்... வேலைக்குப் போறவங்க டிரெயின் ஃபுல்லைா இருக்காங்கல்ல. இப்படி காட்டுக் கத்தல் கத்டதி டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு...”
எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், நாகரிகமாக ஆடை அணிந்திருநத அந்த வாலிபன் மட்டும் துணிச்சலாக ராஜேஸ்வரியிடம் கேட்டான்.
“அது காட்டுமிரான்டி மாதிரி கத்திக்கிட்டே இருக்கில்ல... லேட்டா அழைச்சிட்டு போக வேண்டியது தானே! “ சீட்டிலிருந்து எழுந்து அதிகார தோரணையில் அவன் கத்தினான்.
பயணிகள் பலருக்கு இது ‘சரி’ என்று பட்டது. சிலரின் மனம் ‘அவள் பைத்தியம் தானே, என்ன செய்வாள்... இவனுக்கு என்ன?’ என்றது.
“ஐயா மன்னிச்சருக்க... இதுக்கு கொஞ்ச நேரம் முன்னால போற ரயில்லதான் நேத்து கிளம்பினோம். அப்பவும் இதே மாதிரிதான் திட்டினாங்க... இன்னும் நேரங்கழிச்சி போனா ஆஸ்பத்திரியில சீட்டு கிடைக்காதுங்க. இவள கத்தாம பாத்துக்கிறேன்” . காலில் விழாத குறையாக கெஞ்சினாள் ராஜேஸ்வரி.
மீண்டும் நிசப்தம். மேகலையும் அமைதியானாள்.
“மன்மத ராசா... மன்மத ராசா..” இசை, ரிங் டோனாக அந்த வாலிபனின் செல்போன் சினுங்கியது. அவன் இன்னும் உட்காரவில்லை.
“ஹலோ... டேய் மாப்ளே சொல்றா...” இங்கிதம் கொஞ்சமுமில்லாமல் அவன் அலறினான்.
பயணிகள் அனைவரின் பார்வையும் இப்பொழுது அந்த வாலிபனின் மீது!
“யெஸ்.. வந்திட்டிருக்கேன்டா...”
“ஆமா...”
“உனக்கு கொழுபபு ஜாஸ்திடா. நான் அவளை ஒன்னும் பண்ணலடா.. ஜஸ்ட் டேட்டிங் ஒன்லிடா...’ உரையாடல் தொடர ரயில் அடுத்த நிறுத்ததில் நின்றது.
ராஜேஸ்வரிக்கு காட்டுமிராண்டி யார் என்பது புரிந்தது. பயணிகளுக்கும்தான்!
ஆக்கம் : மால்கம்
பதிவு : உங்கள் ‘புகழன்’

என் நண்பன் ஒருவனின் கதை

அன்பு நண்பர்களே!எழுதக் கற்றுக் கொள்வதற்கு முன் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சிறந்த படிப்பாளி மட்டுமே சிறந்த படைப்பாளியாக முடியும் என்பது என் கருத்து.இது வரை யாராலும் படிக்கப்படாத படைப்புகள் படிக்கப்பட வேண்டும் என்பதே வலைதளங்களின் நோக்கம்.
இந்த வகையில் என் நண்பன் ஒருவன் (டாக்டர் மாத்ருபூதம் நடத்திய “புதிரா புனிதமா” நிகழ்ச்சியில் வரும் “என் நண்பன் ஒருவன்” என்பது போல் நினைத்து விட வேண்டாம். உண்மையிலேயே என் நண்பன் ஒருவன்) எழுதிய சிறுகதைகள் சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.
படியுங்கள்! பாராட்டுங்கள்! படைப்பாளியாக்குங்கள்!