Saturday, March 15, 2008

முரண்

உலகம்
விசித்திரமானது!
எப்போதும் அது
முரணாகவே சிந்திக்கிறது!
நீ கல்லை எத்தியதும்
கல் உன்னைத்
தட்டிவிட்டது என்கிறார்கள்!
நீ முள்ளை மிதித்தாய்
முள் உன்னைக்
குத்தியது எனக் கூறுகிறார்கள்!
அடியே!
இப்போதும் என்னை
விரும்பியது நீதான்!
உன் மனதைக் கெடுத்து விட்டேன்
நான் என்கிறார்கள்!
பழி என் மீது என்றாலும்
வலி எப்போதும்
உனக்கு மட்டும்
என்பதால் தானோ...?
என்றும் அன்புடன்
உங்கள் புகழன்

தாமரை கவிதைகள்

ஒரு கவிப்பொருளே
கவி எழுதுகிறது
தாமரையைப் எழுதாத
கவிஞர்கள் இல்லை
இன்று
(கவிஞர்) தாமைரை எழுதாத
கவிப் பொருள்கள்
இல்லை
“ஏணிப்படி - ஏன் இப்படி?” முதல்
எல்லாமே புரியும் விதத்தில்
அமைந்துள்ளது.
தமிழில் எழுதும் பெண் கவிஞர்களில்
பெண்ணுரிமை பற்றியும் பெண்ணியம் பற்றியும்
தெளிந்த சிந்தையுடன் படிப்பதற்கு விகாரமின்றி எழுதுவது
கவிஞர் தாமரை மட்டுமே.
முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏதுமின்றி
கலாச்சார கட்டுக்குள் பெண்ணியம் பேச ‘சல்மா’, ‘குட்டி ரேவதி’ போன்றவர்களுக்கு ஏன் இயலவில்லை?
சமூக அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக சமூகத்தையே நாறடிக்கும் செயல்களை எப்பொழுதுதான் இவர்கள் விடப்போகிறார்களோ?
பெண்ணியம் வேண்டும்!
அது பெண்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் அமையக் கூடாது என்பதுதான் இன்று பெண்களே எதிர்பார்க்கும் சிந்தனை.

முரண் சிந்தனைகள்

தான்தோன்றித்தனமாக கைக்கு வந்ததையெல்லாம் தட்டி விட்டுப் போக வேண்டும் என்ற வரைமுறையற்ற வரையறைகளில் சிக்கி விடாமல் உருப்படியாக எழுத வேண்டும் என்றுதான் இந்தத் தளத்தைத் துவங்கினேன்.
வலைதளத்திலிருந்து எடுத்து காப்பியடித்து எழுதி அதை விவாதமாக்கிக் கொண்டுள்ளனர் பலர்.
இன்று பல வலைதளத்தில் நுழைந்து வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஏதோ ஒன்றைத் தேடப்போக எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
இவற்றை வாசிக்கும்போது எனக்கு என் சீனியர் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.
“டேய், ஃபேமஸ் ஆனனும்னா கண்டதையும் எழுதனும்டா. எல்லாரும் சொல்லுற விஷயத்தை நீ எப்படி மறுத்துக் கருத்துச் சொல்லுறங்குறதப் பொறுத்துத்தான் உன் பிரபல்யம் ஊர்ஜிதமாகுது. நமக்குன்னு ஒரு தளத்தை வாசிப்பவர்கள் மத்தியில கிரியேட் பண்ணிட்டு, பிறகுதான் நம்ம கருத்தை மக்கள் மத்தியில வைக்க வரணும். அவர்கள் நமக்கு வாசகர்களாகத்தான் இருக்கனும்னு இல்லை. விமர்சணம் பண்ணுறவங்களாகக்கூட இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் விமர்சணம் பண்ணுறவங்கள அதிகமா இருந்தாத்தான் நீ சீக்கிரமே ஃபேமஸ் ஆக முடியும். அதுக்கப்புறம் நீ நினைக்கிற கருத்தை சொல்லும்போது அது மக்கள்ட்ட சீக்கிரமே ரீச் ஆகும். இது ஒண்ணும் நாம கொண்டிருக்கிற கொள்கைக்கு மாற்றமாகவோ முரணாகவோ செய்யிறது இல்லை. நல்லா யோசிச்சுப்பாரு தெரியும்.” என்று சொன்னார்.
இதுவும் ஒரு வகையில் சரியாத்தான் பட்டது.
உண்மைய சொல்லப்போனா இப்படியான முரண் சிந்தனைகள் எனக்கு ரெம்பப் பிடிக்கும். எதையுமே முரணாகவே சிந்தித்து கருத்துக் கூறுவதே என் வழக்கம்.ஃபவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் என்ற புத்தகத்தைப் படித்ததும் எனக்குள்ள ஒரு ஆசை நாமலும் இங்கிலீஸ்ல தெறமைய வளர்த்துக்கிட்டு எப்படியாது ஒரு புக் எழுதனும் “ஃபவர் ஆஃப் நெக்கட்டிவ் திங்கிங்ஸ்” ன்னு.ஆனா இன்னைக்கு வரை ஆங்கில அறிவை வளர்க்க ஒரு சின்ன துரும்பைக் கூட அசைச்சதில்லை.சில நேரங்களில் இந்த முரண் சிந்தனை என்னை ரெம்பவே அதிகம் தெரிய வச்சிடுச்சி.
ஒருத்தர் சொல்லுற கருத்து சரியாவே இருந்தாலும் அதை முரணா சிந்திச்சிதான் ஏத்துக்குவேன்.
இப்படித்தான் அந்த சீனியர் சொன்னதையும் முரணாவே சிந்திச்சேன்.
ஏன் ஒழுங்காவே எழுதி ஃபேமஸ் ஆனவங்க யாருமே இல்லையான்னு அவர்கிட்ட திருப்பிக்கேட்டேன்.
இப்படியாக பல விவாதங்கள் எங்களுக்குள் நடந்தது.
இது இருக்கட்டும். இப்பல்லாம் அதிகமான நேரம் நெட்டில் உட்கார நேரம் கிடைக்கிறது. நிறைய படிக்க முடியுது. அதனால நிறைய எழுதனும் தோனுது. ஆனாலும் அது எல்லாத்தையும் முரண் சிந்தனையிலேயே எழுதினா என்னன்னும் தோனுது. இனி வரும் பதிவுகள் கூட (எல்லாமே இல்லாவிட்டாலும்) ஒரு சிலதாவது என் முரண் சிந்தனையோட பதியப்படும்.
எதிர்க்கருத்துக்களை எதிர்பார்த்து
என்றும் உங்கள் புகழன்

முதல் மாதச் சம்பளம்

“அம்மா... அம்மா...” கூப்பிட்டுக் கொண்டே ஒயிட் அன் ஒயிட் யூனிபார்மிலேயே வீட்டிற்குள் நுழைந்தான் கலைச்செல்வன். அம்மா அடுப்படியிலிருந்து ஹாலுக்கு வர, அவர்களுடைய கையில் ஜவுளிக்கடை கவரைத் திணித்தான்.
“என்னடா இது?”
“என் முதல் மாதச் சம்பளத்தின் சின்ன பரிசும்மா உனக்கு” சொல்லிவிட்டு தங்கையின் பக்கம் திரும்பினான்.
“யாழினி, இந்தா... நீ படிக்கிறியோ இல்லையோ தலைக்கு வெச்சு தூங்குற அளவுள பெரிய புத்தகம் உனக்கு, சுஜாதாவோட சிறுகதைத் தொகுப்பு...”


“ரொம்ப தேங்ஸ் அண்ணா...”


“ராஜா இந்தாடா... உனக்கு எஃப்.எம். ரேடியோ. சூரியன் எஃப்.எம்.மோட ‘சின்னதம்பி... பெரிய தம்பி...’ புரோகிராம் கேட்க காலையிலேயே நீ டீக்கடை வாசல்ல போய் இனி உட்காரத் தேவையில்லை.”


“எப்படி அண்ணா? இப்படி பாசமழை பொழியிறே...’’


நன்றாகப் படித்து, கடின முயற்சிக்குப் பின் ரயில்வேயில் கலைச் செல்வனுக்கு வேலை கிடைத்தது. எலெக்ட்ரிக் ட்ரெயின் டிரைவராக வேலை.
“அப்பா எங்கம்மா?” ஆர்வமுடன் கேட்டாடன்.
“கண்ணாடி மாத்துறதுக்கு போயிருக்காங்க, ரொம்ப நாளாச்சுல்ல... அப்புறம் யாரோ அவரோட நண்பர் இறந்துட்டாங்களாம், அங்கேயும் போயிட்டுத்தான் வருவாரு...’’
இரவு மணி பத்து. இன்னும் அப்பா வரவி்ல்லை.
‘முதல் நாள் வேலைக்குக் கிளம்பும் போது நாள், நட்சத்திரம், நல்லநேரம், நல்ல சகுணம் அது இதுன்னு தாமதப்படுத்தினாரு... இப்ப என்னடான்னா முதல் மாதச் சம்பளத்தை வாங்குவதற்கும் தாமதம்.கோபமான சிந்தனையுடன் சம்பளக் கவரை கையில் வைத்துக் கொண்டு ஹாலின் குறுக்கே அங்கும் இங்கும் உலவினான்.
அப்பா உள்ளே நுழைந்தார். ஆர்வமுடன் கவரை நீட்டினான்.
“இந்தாங்கப்பா என் முதல் மாதச் சம்பளம்”
“வெரிகுட்... இரு நான் குளிச்சிட்டு வந்துடறேன். சாவு வீட்டுக்குப் போயிட்டு வரேன்ல...”
சுளீரென கோபம் வந்தது கலைச் செல்வனுக்கு. அப்பாவை இடையில் மறித்து,
“பிடிங்கப்பா இதை” கவரைக் கையில் திணித்தான்.
“எப்ப பாரு இப்படித்தான்... கண்ணாடிய மாத்தினா மட்டும் போதாதுப்பா கண்ணையும் சேர்த்து மாத்துங்க.
இதுவரைக்கும் பதினேழு பேர் நான் ஓட்டுற ட்ரெயின்ல குறுக்கே விழுந்து செத்திருக்காங்க. அதுக்கும் சேர்த்துத்தான் இந்தச் சம்பளம்.
கலைச் செல்வனின் வார்த்தையில் சமாதியானது அவனது அப்பா பார்த்த சகுணங்களும், சாங்கியங்களும்.
ஆக்கம்: மால்கம்
பதிவு: உங்கள் புகழன்

Wednesday, March 12, 2008

காளியம்மா பாட்டி...

ஊரே கோலாகலமாக இருந்தது. தெரு முழுவதும் விதம் விதமாகப் பாட்டு... வெடிச்சப்தம்...காளியம்மா பாட்டிக்கு இனம்புரியத மகிழ்ச்சி.
சுருக்கம் விழுந்த கருப்பு தோல், ஓலைக் குடிசையில் ஒரு மூளையில் படுத்துக் கிடக்கும் காளியம்மாவுக்கு காது அவ்வளவாகக் கேட்காது. கண் பார்வையும் மங்கி விட்டது.
“வேணாங்க, எனக்கு சொன்னதே போதும். பாட்டி என்ன வரவாப் போறாங்க?” காளியம்மாவின் பேத்தி வஸந்தி அவரைத் தடுத்தாள். கதர் வேட்டி சட்டையில், சம்பிரதாயத்துக்காக தோளில் துண்டைத் தொங்கவிட்டவராக கும்பலோட வந்தவர், “இல்லம்மா... அம்மாவ கூப்பிடாம எப்படி?... அவங்கள அழைச்சிட்டு போறதுக்கு ஏற்பாடு பன்றேம்மா...” ரொம்பவும் குழைவாகப் பேசினார்.“அம்மா... எப்படிம்மா இருக்கீங்க...” அவர் கரிசனையுடன் விசாரிக்க, “யாருய்யா நீ?” கிணற்றுக் குரலில் கேட்டாள் பாட்டி.
“நான்தாம்மா தலையாரி காத்தமுத்தோட மூத்த பையன் இசக்கி........” குடும்ப உறவுகளை நீட்டி முழக்கினாலும், பாட்டிக்கு ‘தலையாரி’ என்ற வார்த்தையைத் தவிர, வேறு எதுவும் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை.“சரி பாட்டி... போயிட்டு வாரேன். நம்ம பசங்க உங்களை பத்திரமா அழைச்சிட்டு வந்து, வீடு வரைக்கும் விட்டுருவாங்க... மறந்திடாம வந்திடுங்க...” விடைபெற்றார்.
“வருடா வருடம் நடக்கும் திருவிழாவா? ஊர்ப்பஞ்சாயத்து தலைவர் வீட்டுக் கல்யாணமா? எதுக்காக என்னைக் கூப்பிடுறாங்க?” தொண்டைக் குழியில் மூச்சுத் திணறும் அந்திமக் காலத்தில்கூட ஆழ்ந்து சிந்தித்தாள் காளியம்மா பாட்டி.அடுத்த நாளும் இதே மாதிரியே கும்பல்...வஸந்தியின் மறுப்பு... பாட்டிக்கு விசேஷ அழைப்பு. ஆனால் இன்று வந்தவர் தமிழ் வாத்தியார் ராமசாமி!காளியம்மா பாட்டிக்கு ஓரளவு புரிந்து விட்டது.
‘வாத்தியார் பொண்ணுக்கும் தலையாரி பையனுக்கும் கல்யாணம் போல... அதான் வந்து கூப்பிடுறாங்க...’அந்த நாளும் வந்தது. ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு பாட்டியை அழைத்துப் போகிறார்கள்.‘வாத்தியார் பொண்ணு கல்யாணமில்ல... அதான் பள்ளிக்கூடத்துல விருந்து வைக்கிறாங்க போல...’ என்று மனதுக்குள் நினைத்த காளியம்மா பாட்டியின் சிந்தனை தெளிவாக இருந்தது.
வகுப்பறைக்குள் தூக்கிச் செல்லும் போது ஒருவன் பாட்டியின் காதில் ஓதினான்.
“ஏலே கிழவி! சொன்ன மாதிரி நாங்கதான் உன்னை தூக்கியாந்தோம். அதனால எங்க தலைவரு நிக்கிற பானைச் சின்னத்தைப் பாத்து ஓட்டைக் குத்திப்புடு... மறந்திடாதே பாட்டி...”
ஆக்கம்: மால்கம்
பதிவு : உங்கள் ‘புகழன்’