Monday, October 27, 2008

தமிழ் சினிமா இழந்தது...

முன் குறிப்பு: கடைசியில் பின் குறிப்பு உள்ளது தவறாமல் படித்து விட்டுச் செல்லவும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
5 வயதிருக்கும் (சரியாகத் தெரியவில்லை). முதலில் பார்த்த படம் நன்றாக நினைவு இருக்கின்றது. எங்க அப்பா வேலை செய்த கடையின் முதலாளி ஒரு தியேட்டர் வைத்திருந்தார். எங்கப்பா எங்களையெல்லாம் அங்கதான் கூட்டிட்டு போவாங்க. என்னைய முதல்ல கூட்டிட்டு போன படம் ரஜினி நடித்த பில்லா. படத்துல வர்றது எல்லாம் உண்மைதான்னு நினைக்கிற வயசுதான அது. அதனால எங்க அப்பாகிட்ட கேட்டேன். ரஜினி செத்த பிறகு மறுபடியும் எப்படி வந்து நடிக்கிறார்னு. அப்பத்தான் எங்க அப்பா டபுள் ஆக்ட் பற்றியும் சினிமா என்பது உண்மை அல்ல என்பது பற்றியும் விளக்கிச் சொன்னாங்க. அதனால எனக்கு விவரம் தெரிந்த பின் எந்த படமும் எந்த உணர்வையும் ஏற்படுத்தல. ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்காகத்தான் எடுத்துக்கிட்டேன். எனவே எந்தப் படமும் அவ்வளவாக மனசில் நிக்கல. அப்புறமா உமர் முக்தார் நினைவில் உள்ளது. தற்போது பழைய படங்களை மீண்டும் தற்கால அறிவு, அரசியல், சமூக நிலை இவற்றோடு ஒப்பிட்டு கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக பார்க்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
ரமணா - அழகி இரண்டில் எதுவென்று தெரியவில்லை. ஏனெனில் இரண்டுமே 5 வருடங்களுக்கு முன் பார்த்தது. அதன் பின் படம் ஏதும் பார்க்கவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம் - விசிடிலதான்.
இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்களே. நாம ஜாலியா இங்க திருட்டு விசிடில பார்க்கிறோமேன்னு உணர்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பழையதில் கிழக்குச் சீமை - இன்றுவரை அண்ணண் தங்கை பாசம் என்றால் பாசமலர் படத்தைத்தான் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ கிழக்குச் சீமை முன்னதை முந்திவிட்டதாகத் தோன்றுகிறது. ஏ.ஆர்.ஆர். இசையும் ஒரு காரணம். புதியதில் அரண் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நம் நாட்டிலேயே நம் இராணுவத்தால் பாதிக்கப்படும் கஷ்மீரிகளின் சோகங்கள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ரஜினியின் குசேலனைத் தொடர்ந்த கர்நாடகப் பிரச்சினை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தொழில்நுட்பம் பற்றியெல்லாம் தெரியாது. தசாவதாரம் கொஞ்சம் திகைக்க வைத்தது. நல்ல பிரமாண்டம் (ஓசில பார்த்தா அப்படித்தான் இருக்கும் போல) :)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையவே படிப்பேன். என் நண்பர்கள் கூட சொல்வார்கள். படமே பார்க்கிறதில்லைன்னு சொல்ற. பின்ன எப்படி எல்லா படத்தப் பத்தியும் கரெக்டா சொல்லுறன்னு. இப்பல்லாம் விமர்சணங்கள் படித்தாலே பாதி பார்த்தமாதிரி ஆகிடுது. அப்புறம் இருக்கவே இருக்கு ப்ளாக் முழுப்படத்தையும் இன்ஞ் பை இன்ஞ்சா விவரிச்சு எழுதி கண்ணு முன்னால கொண்டு வந்துடுறாங்க.

7. தமிழ்ச்சினிமா இசை?
இசை என்றாலே இளையராஜாதான் சட்டென்று ஞாபகத்துக்கு வரும்.
அடுத்து ஏ.ஆர்.ஆர்.
ஆனா இப்பல்லாம் நிறைய இசைக்கு பஞ்சமாகிவிட்டதுபோல் தமிழ் இசையமைப்பாளர்கள் நடந்து கொள்கின்றனர். காப்பி பேஸ்ட் பண்ணுற பிளாக்கர்கள் பரவாயில்லையோ என்று தோனுது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தியில் - லகான்,
ஆங்கிலம், ஈரானியப் படங்கள் எப்பவாவது பார்ப்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படி ஒரு வாய்ப்பை தமிழ் சினிமா இழந்து விட்டது. இனிமேலும் அந்த பாக்கியம் தமிழ் சினிமாவிற்கு இல்லை என்றே தோன்றுகிறது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொழுதுபோக்குக்காக என்றால் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் (எவ்வளவு மோசமாக இருந்தாலும் தலிவா என்று கையசைத்து விசிலடிக்கும் ரசிகர்கள் இருக்கும்வரை). ஆனால் மக்கள்ஸ் அதை மட்டும் எதிர்பார்த்து படம் பார்க்கச் செல்வதில்லையே.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அந்த நாளை ரெம்பவே எதிர்பார்க்க வேண்டும் நாம். வாசிப்புப் பழக்கம் குறைந்ததற்கு தற்கால அதிவேக கலாச்சாரத்துடன் சினிமாவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே வாசிப்புப் பழக்கம் பெருகும்.

பின்குறிப்பு: எல்லோரும் தொடர் பதிவு எழுதி வெளையாடுறாய்க. நம்மல சேத்துக்கவே மாட்டிங்கிறாய்களேன்னு ரெம்பவே வருத்தமா இருந்திச்சு. யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஒவ்வொரு தொடர்பதிவையும் விடாம படிப்பேன். ஆனா பூச்சாண்டி என்னைய எழுத அழைத்ததும் எனக்கு திக்குனு ஆகிப் போச்சு. (தொடர்பதிவு எழுத அழைத்தால் மறுக்கக் கூடாது என்பது பதிவுலகில் எழுதப்படாத விதியாமே) அப்பறம்தான் யோசிச்சேன். ஆசைப் பட்டது ரெம்பத் தப்புன்னு. என்ன எழுதுறது. நாம என்ன பெரிய்ய எழுத்தாளரா என்ன?

சினிமா பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
இசை பத்தி என்ன நினைக்கிறீங்க?
தொழில்நுட்பம் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று விழாக்காலங்களில் பிரபல்ய ஹீரோ ஹீரோயின்களிடம் பேட்டி எடுப்பது போல் இருந்தால் என்ன பதில் சொல்றதுன்னு திகைச்சுப் போயிட்டேன். (மவனே மத்தவங்க எழுதுனத படிக்க மட்டும் தெரியுது எழுதமாட்டியோன்னு யாரும் திட்டாதீங்க) இப்படியான சிக்கல்கள் ஒருபுறம் அதிகப்படியான ஆபீஸ் வேலைகள் மறுபுறம் (ஆமா... அப்படியே வேளை இல்லைன்னாலும் எழுதிக் கிழிச்சன்னு யாரோ சொல்றது கேட்குது)
இப்ப தீவாளி லீவுல அதுனால இதுக்கு ஒரு முடிவு கட்டிறனும்னு எழுதிட்டேன்.

அதுக்கப்புறம் முக்கியமான விஷயம் இந்த ஆட்டத்தைத் தொடர யாரையாவது அழைக்கனுமாமே? என்னதான் ரூல்ஸ் இருந்தாலும் பரவாயில்லை அய்யோ பாவம் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு சும்மா இருக்கலாம்னு நினைச்சா சட்டுன்னு ஒன்னு தோனி்ச்சு...
(ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்கடா சோம்பேறி... நீ யாரைக் கூப்பிட்டாலும் அவங்க எழுதியிருப்பாங்க)
அய்யோ யாரு திடீர்னு திட்டுறது? (ஓ! மனசாட்சியா?)

நம்மல மாதிரியே தொடர்பதிவு எழுத ஆசைப்பட்டு யாராலும் அழைக்கப்படாமல் சிலர் இருப்பாங்க. அப்படித் தேடி மூன்று பேரை மட்டும் அழைக்கிறேன்.

மின்னல் - சுமதி
ஊஞ்சல் - தாரணி பிரியா
நல்ல நண்பன் - பாபு

Sunday, October 12, 2008

கா.மு - கா.பி. - ரிவர்ஸபுல் (Reversable)

பதிவுலக நண்பர் வால்பையன் அவர்களின் ர்ரிவர்ஸபுல்(irreversable) ஒரு புதிய முயற்சி என்ற இந்தப் பதிவையும் இதற்கு முந்தைய ர்ரிவர்ஸபுல் பற்றிய பதிவையும் படித்து விட்டு இதுபோல் ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

பாவம் சக பதிவர்களை கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டாம் என்ற நல்ல நோக்கத்தில் அந்த முயற்சியை மறந்திருக்கும் போது இன்று தினமணி இணைப்பு இதழான தினமணி கதிரில் ‘பேல் பூரி’ என்ற பகுதியைப் படித்தேன். அதில் வந்த ஒரு பகுதி மிகவும் பிடித்திருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி ரிவர்ஸபுல்

காதலிப்பதற்கு முன்

அவன்: “ஆம். எதிர் பார்த்துதான் காத்திருக்கிறேன்”.

அவள்: ‘‘என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா?”

அவன்: “இல்லை. அப்படி நினைக்காதே.”

அவள்: “என்னைக் காதலிக்கிறாய் தானே?”

அவன்: “நிச்சயமாக... நிச்சயமாக...”

அவள்: “உன்னை நம்பி மோசம் போய் விடமாட்டேனே?”

அவன்: “தயவு செய்து இப்படியெல்லாம் கேட்காதே...”

அவள்: “என்னை முத்தமிடுவாயா?”

அவன்: “வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்...”

அவள்: “எப்போதாவது என்னை அடிப்பாயா?”

அவன்: “உனக்கு என்ன பைத்தியமா? அப்படியெல்லாம் யோசிக்காதே”

அவள்: “எப்போதும் என்னோடுதானே இருப்பாய்?”

அவன்: “யெஸ்... யெஸ்...”

அவள்: “டார்லிங்!”

காதலித்ததிற்குப் பின்னான கதையைக் கீழே இருந்து மேலே படித்துப் போகவும்.

Saturday, October 11, 2008

அது ஒரு காகம்!

நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்ற போது அங்கு கிடந்த புத்தகத்தில் படித்தது.
நீங்களும் படிக்கலாமே!

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது!
80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை படித்துக் கொண்டிருக்கிறார்.
நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
'என்ன இது?' என்று கேட்டார் முதியவர்.
லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார்,
'அது ஒரு காகம்'
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், 'என்ன இது?'
'இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்' என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், 'என்ன இது?'
சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், 'அது ஒரு காகம், காகம்!'
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், 'என்ன இது?'
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், 'அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்' என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?'
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை.
அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது. அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
'எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் 'அது என்ன' என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்' என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது'.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன.
23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.
திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.
“(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக!
(திருமறை அத்தியாயம் 17 - வசனம் 23, 24)
தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, 'என்னுடைய இறைவனே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் உனக்கு வழிப்படுகின்றவர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்' என்று அவன் கூறுகின்றான்.
(திருமறை அத்தியாயம் 46 - வசனம் 15)