Thursday, August 7, 2008

தேவயானியும் ஹிலாரி கிளின்டனும்...

(முன்னுரையாக கசனின் கதை மிக மிகச் சுருக்கமாக)தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் கட்டளைக்கிணங்க அசுரகுல குரு சுக்கராச்சாரியாரிடம் மாணவனாக சேர்ந்தான் பிரகஸ்பதியின் மகன் கசன்.


இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்பதுதான் நோக்கம்.

கசனின் நோக்கம் தெரிந்திருந்தும் சம்பிரதாயப்படி கசனை சீடனாக ஏற்றார் சுக்கராச்சாரி. எனினும் சஞ்சீவினையை மட்டும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று உறுதிபூண்டார்.


சுக்கராச்சாரியாருக்கு தேவயானி என்றொரு தேவதை மகளாய் இருந்தாள்.

வாதங்களில் தந்தையையே திணறவைத்த அந்த வாலிபனை வியந்து பார்த்தாள் தேவயானி. வியப்பு விரைவில் காதலானது.


மெல்ல மெல்ல இந்த நெருக்கம் அசுரர்களுக்குத் தெரிந்ததும், எங்கே சுக்கராச்சாரியார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி கசனை தீர்த்துக்கட்ட உத்தரவிட்டார் மன்னராக இருந்த விருஷபர்வா.

அதன்படியே கசனை கொன்று துண்டு துண்டாக்கி நாய்களுக்குப் போட்டுவிட்டனர்.


கசனைக் காணாது தேவயானி தவித்துப் போய்விட்டாள். “கசனுக்கு ஏதோ ஆகிவிட்டது. அவனை உயிரோடு கொண்டு வந்தே ஆக வேண்டும்” என்றாள். சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தார் சுக்ராச்சாரியார். கசன் நாய்களின் உடலைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டான்.


செய்தியறிந்து விதிர்விதிர்த்துப் போனாலும் தனது முயற்சியைக் கைவிடாத விருஷபர்வா, கசனைக் கொன்று எதித்து அந்தச் சாம்பலை மதுவில் கலந்து சுக்கராச்சாரியாருக்கே கொடுத்துவிடும்படி தனது ஆட்களை ஏவினார். அவர்களும் அப்படியே செய்துவிட்டனர். மீண்டும் கசனைக் காணாது கண்ணீர் விட்டாள் தேவயாணி. அன்பு மகளின் கலக்கத்தைக் காணப் பெறாத அவளின் தந்தை சஞ்சீவினியை உச்சரிக்கத் தொடங்கினார். அவரின் வயிற்றுக்குள் இருந்த கசன் மெல்ல மெல்ல உணர்வுபெற ஆரம்பித்தான். இதனை அறிந்த குருவானவர் மந்திரத்தைப் பாதியிலேயே நிறுத்தி விட்டார்.


“மகளே! கசன் என் வயிற்றுக்குள் இருக்கிறான். மந்திரத்தை முழுவதும் சொல்லி முடித்தால் என்னைப் பிளந்து கொண்டு வெளிப்படுவான். நான் மாண்டு போவேன். எனவே நீ கசனை மறந்து விடு. அவன் கதை முடிந்து விட்டது.”


தேவயானியின் மனோநிலை விசித்திரமாக இருந்தது. தனது உயிருக்கு ஆபத்து என்றதும் கசனை மறந்து விடுவாள் என்றுதான் சுக்கராச்சாரியாரும் நினைத்தார். அவளோ புலம்பினாள்.


“எனக்கு நீங்களும் வேண்டும் கசனும் வேண்டும். இருவரும் எனது இரு கண்கள். எந்த ஒன்றையும் நான் இழக்க முடியாது.”


சுக்ராச்சாரியார் எதையோ இழந்தது போலானார். தனக்கு சமதையாக இன்னொரு உயிரைத் தனது மகள் கருதக்கூடும் என்கிற உண்மை அந்தத் தந்தைக்கு உள்ளூரப் பெரும் வேதனையைத் தந்தது.


“இருவரில் ஒருவரைத்தான் காக்க முடியும். இருவரையும் எப்படிக் காக்க முடியும்?”


“அதற்கு வழி இருக்கிறது தந்தையே. சஞ்சீவினி மந்திரத்தை முதலில் எனக்குச் சொல்லிக் கொடுங்கள் பின்னர். தாங்கள் துவங்கிய மந்திரத்தை முழுமையாகச் சொல்லி கசனை உயிர்ப்பியுங்கள். சஞ்சீவினி கொண்டு உங்களை நான் எழுப்பி விடுகிறேன்.”


சுக்ராச்சாரியார் முகத்தில் லேசான புன்னகை. எதையோ யோசித்தார்.

“மகளே! சற்று நேரம் அப்பால் இரு. நாங்கள் இருவருமே உயிருடன் வருவோம்.”


அப்படியே தேவயானி வேறுபுறம் சென்றாள். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது குருவும் சீடனும் குதூகலத்துடன் பேசிக் கொண்டிருநதனர். அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி. உலகத்தையே வென்றுவிட்ட உற்சாகம். கசனைக் கட்டிப் பிடித்துக் கூத்தாடினாலள். இதுதான் தருணம் என்று கசனை தான் மனதில் வரித்திருக்கிற விஷயத்தையும் தந்தையிடம் கூறிவிட்டாள். குருவுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் சீடனுக்கு...?


பல்வேறு சமாதானங்கள் கூறி தேவலோகம் சென்றுவிட்டான் கசன்.


திகைத்துப் போன தேவயானி நெடுநேரம் அழுதாள். திடீரென்று ஒரு ஞாபகம் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த தந்தையே நோக்கினாள்.


“எப்படி இருவருமே உயிரோடு வந்தீர்கள்?”


“ம்... முதலில் சஞ்சீவினியை வயிற்றுக்குள் இருந்த கசனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். பிறகு அவனை உயிர்ப்பித்தேன். என்னைப் பிளந்து கொண்டு வெளியே வந்த அவன். அதே மந்திரத்தின் மூலம் என்னை உயிர்ப்பித்தான். என்ன இருந்தாலும் சொன்ன சொல்லைத் தட்டாத சீடன். எனக்குத் துரோகம் இழைக்கவில்லை.”


“ஐயோ! சஞ்சீவினியைக் கற்றுக் கொண்டு போய்விட்டானே! அதற்கு பதிலாக எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே?”


“மகளே! பெண்ணுக்கு எந்த வித்தையையும் கற்றுத் தரக்கூடாது. உனக்குத் தெரியாதா? ஆணுக்குத்தான் உபநயனம். பெண்ணுக்கு உபநயனம் அவளது திருமணமே.”


கசன் தன்னை விட்டுப் போன சோகத்தைவிட வேறு ஒரு சோகம் தன்னைத் தனது பிறப்பிலிருந்தே சூழ்ந்திருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள் தேவயானி. பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா? எதிரியின் மகனுக்குக் கற்றுத்தரும் வித்தையை பெற்ற மகளுக்குக் கற்றுத் தரக்கூடாதா? சுக்கராச்சாரியாரையும் கசனையும் முதன்முதலாக வெறுப்போடு நினைத்தாள்.

அமெரிக்காவுக்கு அதிபர் தேர்தல் வரப்போகிறது.

அதற்கு முன் தேர்தலில் யார் வேட்பாளராக போட்டியிருவது என்பதற்கு ஒரு தேர்தல் நடந்தது.

அதில் ஜனநாயகக் கட்சியில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்களில் இருவர் முக்கியமானவர்கள்.
1. பராக் ஒபாமா
2. ஹிலாரி கிளின்டன்.


இருவருக்கும் இடையே நிகழ்ந்தது கடும் போட்டி. ஒவ்வொரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அளவில் விவாதிக்கப்பட்டது.


இறுதியில் ஹிலாரியை தோற்கடித்துவிட்டு பராக் ஒபாமா வெற்றி பெற்றார்.

பராக் ஒபாமா வெற்றி பெற்றதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம்.

ஆனால் ஹிலாரி கிளின்டன் தோல்வியடைய என்ன காரணம்?

வெற்றிக்கு காரணங்கள் சொல்லலாம் தோல்விக்கு எப்படி காரணம் சொல்ல முடியும்?


ஹிலாரி ஒரு அமெரிக்க வெள்ளைக்கார்.
ஆனால் ஒபாமாவோ கருப்பினத்தவர்.


ஹிலாரி கிறிஸ்தவர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் ஒபாமா கிறிஸ்தவர்தானா என்பதிலேயே சந்தேகங்கள் கிளப்பி விடப்பட்டது. பராக் ஹுஸைன் ஒபாமா என்ற அவரது பெயரை வைத்து அவர் முஸ்லிம் என்றெல்லாம் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.


இப்படி அமெரிக்கர்கள் ஹிலாரியை வெற்றிபெறச் செய்வதற்கு என்னற்ற காரணங்கள் இருந்தும் ஹிலாரி தோல்வியடைந்தார்?


அதுதான் ஏன் என்று புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை பதிவை முதலில் இருந்து படித்துக் கொள்ளுங்கள்.

24 comments:

துளசி கோபால் said...

நேத்துதான் இந்த தேவயானி கதையைக் கோபாலுக்குச் சொன்னேன்.

இன்னிக்கு நீங்க போட்டுருக்கீங்க!!!!

புதுகைத் தென்றல் said...

பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா?

அப்படித்தான் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

:(((((((((

புதுகைத் தென்றல் said...

தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இந்த கதை எனக்குப்படித்த நியாபகம் இருக்கு.. ஆனா அவளுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருந்ததுங்கற விசயம் சரியா படிச்ச நியாபகம் இல்ல.. பூந்தளிர் படிக்கற வயசில் பெண்ணியமெல்லாம் தெரியாதில்ல.. :)

புகழன் said...

//
துளசி கோபால் said...
நேத்துதான் இந்த தேவயானி கதையைக் கோபாலுக்குச் சொன்னேன்.

இன்னிக்கு நீங்க போட்டுருக்கீங்க!!!!

//

வாங்க துளசி கோபால்
வருகைக்கு நன்றி

புகழன் said...

// புதுகைத் தென்றல் said...
பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா?

அப்படித்தான் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

:(((((((((

//

பெண்ணியத்தையும் பெண் விடுதலையையும் பேசும் அமெரிக்கர்களிடம் இதுபோன்ற நினைப்புகள் அதிகம்.

புகழன் said...

// புதுகைத் தென்றல் said...
தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்

//

நன்றி புதுகை தென்றல்

புகழன் said...

//
முத்துலெட்சுமி-கயல்விழி said...
இந்த கதை எனக்குப்படித்த நியாபகம் இருக்கு.. ஆனா அவளுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருந்ததுங்கற விசயம் சரியா படிச்ச நியாபகம் இல்ல.. பூந்தளிர் படிக்கற வயசில் பெண்ணியமெல்லாம் தெரியாதில்ல.. :)

//

அக்கா முத்தக்கா
இந்தக் கதையை அருணன் “எழுதிய பூரு வம்சம” என்ற நூலில் படித்தேன்.

மகாபாரதத்தை மீளாய்வு செய்து எழுதப்பட்ட நூல் படித்துப் பாருங்கள் ரெம்பவே வித்தியாசமாக இருக்கும்.
அதுவும் ஒரிஜினல் மஹாபாரதத்தைப் படித்துவிட்டு படித்தால் நன்றாக இருக்கும்.

முகவரி:
வசந்தம் வெளியீட்டகம்
6-4/23 முதலாவது குறுக்குத் தெரு,
விஸ்வநாதபுரம்
மதுரை - 625014.

புதுகைச் சாரல் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.

மங்களூர் சிவா said...

மிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(

சாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ!?!?

cheena (சீனா) said...

புகழன்

இக்கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் சஞ்சீவினியை தேவயானிக்குக் கற்றுக் கொடுக்காததற்கு அவள் ஒரு பெண் என்பதே காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை - அதனை நான் கேள்விப்பட்டதுமில்லை

தமிழ் பிரியன் said...

தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.
ஆனா பெண் என்ற காரணத்தால் ஹிலாரி தோற்கடிக்கப் பட்டார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கலாம்... :)

தமிழ் பிரியன் said...

///மங்களூர் சிவா said...
மிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(
சாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ!?!?///
‘தல'யோட கருத்துக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போட்டுக்கிறேன்... :)))

புகழன் said...

//cheena (சீனா) said...
புகழன்

இக்கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் சஞ்சீவினியை தேவயானிக்குக் கற்றுக் கொடுக்காததற்கு அவள் ஒரு பெண் என்பதே காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை - அதனை நான் கேள்விப்பட்டதுமில்லை

//

வேறு என்ன காரணத்திற்காக சஞ்சீவினியை தேவயானிக்கு கற்றுக் கொடுக்கவில்லை?
பெண் என்பதால்தான் என அருணன் கூறுகிறார்.

புகழன் said...

//தமிழ் பிரியன் said...
தெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.
ஆனா பெண் என்ற காரணத்தால் ஹிலாரி தோற்கடிக்கப் பட்டார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கலாம்... :)

//

இதுவரை அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபராக வந்ததில்லை என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது இப்படி நினைக்கத் தோன்றுகிறது.

கயல்விழி said...

இந்த பதிவு படித்ததும் மனம் கனமாகிவிட்டது :(

அமரிக்காவிலும் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது, இவர்கள் ஆஃப்கானிஸ்தானை குறை சொல்வது தான் காமெடி.

துளசி கோபால் said...

கயலு,

நான் வச்சிருப்பது ராஜாஜி அவர்கள் எழுதுன 'மகாபாரதம்'. எளிமையாக் கதைபோல எழுதி இருக்கார். இது அந்தக் காலத்தில் சின்னபிள்ளைகளுக்காகவே கல்கியில் தொடராக ,'வியாசர் விருந்து' என்ற பெயரில் வந்தது.

உங்க தமிழ்ச்சங்க நூலகத்தில் இருக்கலாம். தேடிப்பாருங்கள்:-)

நிஜமா நல்லவன் said...

அழாக தெளிவா உங்களோட கருத்தை வெளிப்படுத்தி இருக்கீங்க. வாழ்த்துக்கள். தேவயானிக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லித்தராததற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கு என்பதை இப்பொழுது தான் படிக்கிறேன். ஹிலாரி தோல்விக்கு பெண் என்பது மட்டுமே காரணம் அல்ல. அதையும் தாண்டி வேறு பல காரணங்கள் இருக்கலாம்.

செந்தழல் ரவி said...

:)))

சென்ஷி said...

//செந்தழல் ரவி said...
:)))
//

ரிப்பீட்டே...

டொன் லீ said...

தேவயானி சஞ்சீவினி கதையை விடுங்கள். கிலாரி கிளின்டன் தோல்விக்கு பலகாரணங்கள், அதில் முதல் காரணமே அவர்தான் ஒழியெ "பெண் என்ற" காரணம் கிடையாது. அயவோவாவில் நடந்த தேர்தலில் தோல்வி அடந்த பின் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் அழுது அனுதாபம் தேடியது, சராசரி அரசியல் வாதியாக சேர்பியாவில் தன்னை சுட்டதாகா போலி அனுதாபம் தேடியது, அதுக்கும் மேலாக தன் கணவரை அதிகமாக சுதந்திரம் கொடுத்தது, குறிப்பாக ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு, இவையெல்லாம் நடுநிலையான வாக்காளரை ஒபாமாக்கு ஆதரவா மாற்றி விட்டது.

மற்றது ஒபாமா, புதியவர், நல்ல பேச்சாளர், கட்சி தேர்தல் தொடங்கும் முன்பே ஒபாமாவை விட முன்ணனியில் நின்றவர் கில்லாரி, அப்பவே புத்திசாலித்தனமாக ஒபாமாவை சமாளித்திருக்கலாம். தவறவிட்டுவிட்டார். அது மட்டுமல்லாமல் ஜனநாயக கட்சியின் நான்சி போலஸ்கி போன்ற முக்கிய பெண் தலைவர்களே கில்லாரி வருவதை விரும்பாதது குறிப்பிடத்தக்கது. காரணம் திருவாளர் கிளின்டன் அவர்களாக இருக்கலாம்

என்ன தான் இருந்தாலும் கில்லாரிக்கு வாய்ப்பு கைநழுவிப்போய் விடவில்லை. நவம்பர் முடிவுகளை பொறுத்து அடுத்த 2012 தேர்தலில் அவர் மறுபடியும் களம் இறங்க சாத்தியமுண்டு. ஆனால் நான் அவரைக் காட்டிலும் நான்ஸி பொல்ஸ்கி களம் இறங்குவதையே விரும்புகிறேன்.

வால்பையன் said...

அந்த நுண்ணரசியல் வேறு இது வேறு!
ஆனால் அலசல் என்னவோ சரிதான்!
ஹிலாரி பெண்ணாகினும் அவரது கணவர் மேல் இருந்த அதிருப்தியும் காரணமாயிருக்கும் என்பது என் கணிப்பு

வால்பையன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

///மங்களூர் சிவா said...
மிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(
சாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ!?!?///
=))))

டொன் லீக்கு நன்றி.

இக்பால் said...

எளிமையா, ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.