Saturday, March 15, 2008

முதல் மாதச் சம்பளம்

“அம்மா... அம்மா...” கூப்பிட்டுக் கொண்டே ஒயிட் அன் ஒயிட் யூனிபார்மிலேயே வீட்டிற்குள் நுழைந்தான் கலைச்செல்வன். அம்மா அடுப்படியிலிருந்து ஹாலுக்கு வர, அவர்களுடைய கையில் ஜவுளிக்கடை கவரைத் திணித்தான்.
“என்னடா இது?”
“என் முதல் மாதச் சம்பளத்தின் சின்ன பரிசும்மா உனக்கு” சொல்லிவிட்டு தங்கையின் பக்கம் திரும்பினான்.
“யாழினி, இந்தா... நீ படிக்கிறியோ இல்லையோ தலைக்கு வெச்சு தூங்குற அளவுள பெரிய புத்தகம் உனக்கு, சுஜாதாவோட சிறுகதைத் தொகுப்பு...”


“ரொம்ப தேங்ஸ் அண்ணா...”


“ராஜா இந்தாடா... உனக்கு எஃப்.எம். ரேடியோ. சூரியன் எஃப்.எம்.மோட ‘சின்னதம்பி... பெரிய தம்பி...’ புரோகிராம் கேட்க காலையிலேயே நீ டீக்கடை வாசல்ல போய் இனி உட்காரத் தேவையில்லை.”


“எப்படி அண்ணா? இப்படி பாசமழை பொழியிறே...’’


நன்றாகப் படித்து, கடின முயற்சிக்குப் பின் ரயில்வேயில் கலைச் செல்வனுக்கு வேலை கிடைத்தது. எலெக்ட்ரிக் ட்ரெயின் டிரைவராக வேலை.
“அப்பா எங்கம்மா?” ஆர்வமுடன் கேட்டாடன்.
“கண்ணாடி மாத்துறதுக்கு போயிருக்காங்க, ரொம்ப நாளாச்சுல்ல... அப்புறம் யாரோ அவரோட நண்பர் இறந்துட்டாங்களாம், அங்கேயும் போயிட்டுத்தான் வருவாரு...’’
இரவு மணி பத்து. இன்னும் அப்பா வரவி்ல்லை.
‘முதல் நாள் வேலைக்குக் கிளம்பும் போது நாள், நட்சத்திரம், நல்லநேரம், நல்ல சகுணம் அது இதுன்னு தாமதப்படுத்தினாரு... இப்ப என்னடான்னா முதல் மாதச் சம்பளத்தை வாங்குவதற்கும் தாமதம்.கோபமான சிந்தனையுடன் சம்பளக் கவரை கையில் வைத்துக் கொண்டு ஹாலின் குறுக்கே அங்கும் இங்கும் உலவினான்.
அப்பா உள்ளே நுழைந்தார். ஆர்வமுடன் கவரை நீட்டினான்.
“இந்தாங்கப்பா என் முதல் மாதச் சம்பளம்”
“வெரிகுட்... இரு நான் குளிச்சிட்டு வந்துடறேன். சாவு வீட்டுக்குப் போயிட்டு வரேன்ல...”
சுளீரென கோபம் வந்தது கலைச் செல்வனுக்கு. அப்பாவை இடையில் மறித்து,
“பிடிங்கப்பா இதை” கவரைக் கையில் திணித்தான்.
“எப்ப பாரு இப்படித்தான்... கண்ணாடிய மாத்தினா மட்டும் போதாதுப்பா கண்ணையும் சேர்த்து மாத்துங்க.
இதுவரைக்கும் பதினேழு பேர் நான் ஓட்டுற ட்ரெயின்ல குறுக்கே விழுந்து செத்திருக்காங்க. அதுக்கும் சேர்த்துத்தான் இந்தச் சம்பளம்.
கலைச் செல்வனின் வார்த்தையில் சமாதியானது அவனது அப்பா பார்த்த சகுணங்களும், சாங்கியங்களும்.
ஆக்கம்: மால்கம்
பதிவு: உங்கள் புகழன்

1 comment:

cheena (சீனா) said...

சகுனக்கள் பார்ப்பது தவறில்லை. பார்க்க வேண்டாம் என்பதற்கான காரணம் வலுவாக இல்லை. கதை யதார்த்தமாய் செல்கிறது.