Wednesday, March 12, 2008

காளியம்மா பாட்டி...

ஊரே கோலாகலமாக இருந்தது. தெரு முழுவதும் விதம் விதமாகப் பாட்டு... வெடிச்சப்தம்...காளியம்மா பாட்டிக்கு இனம்புரியத மகிழ்ச்சி.
சுருக்கம் விழுந்த கருப்பு தோல், ஓலைக் குடிசையில் ஒரு மூளையில் படுத்துக் கிடக்கும் காளியம்மாவுக்கு காது அவ்வளவாகக் கேட்காது. கண் பார்வையும் மங்கி விட்டது.
“வேணாங்க, எனக்கு சொன்னதே போதும். பாட்டி என்ன வரவாப் போறாங்க?” காளியம்மாவின் பேத்தி வஸந்தி அவரைத் தடுத்தாள். கதர் வேட்டி சட்டையில், சம்பிரதாயத்துக்காக தோளில் துண்டைத் தொங்கவிட்டவராக கும்பலோட வந்தவர், “இல்லம்மா... அம்மாவ கூப்பிடாம எப்படி?... அவங்கள அழைச்சிட்டு போறதுக்கு ஏற்பாடு பன்றேம்மா...” ரொம்பவும் குழைவாகப் பேசினார்.“அம்மா... எப்படிம்மா இருக்கீங்க...” அவர் கரிசனையுடன் விசாரிக்க, “யாருய்யா நீ?” கிணற்றுக் குரலில் கேட்டாள் பாட்டி.
“நான்தாம்மா தலையாரி காத்தமுத்தோட மூத்த பையன் இசக்கி........” குடும்ப உறவுகளை நீட்டி முழக்கினாலும், பாட்டிக்கு ‘தலையாரி’ என்ற வார்த்தையைத் தவிர, வேறு எதுவும் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை.“சரி பாட்டி... போயிட்டு வாரேன். நம்ம பசங்க உங்களை பத்திரமா அழைச்சிட்டு வந்து, வீடு வரைக்கும் விட்டுருவாங்க... மறந்திடாம வந்திடுங்க...” விடைபெற்றார்.
“வருடா வருடம் நடக்கும் திருவிழாவா? ஊர்ப்பஞ்சாயத்து தலைவர் வீட்டுக் கல்யாணமா? எதுக்காக என்னைக் கூப்பிடுறாங்க?” தொண்டைக் குழியில் மூச்சுத் திணறும் அந்திமக் காலத்தில்கூட ஆழ்ந்து சிந்தித்தாள் காளியம்மா பாட்டி.அடுத்த நாளும் இதே மாதிரியே கும்பல்...வஸந்தியின் மறுப்பு... பாட்டிக்கு விசேஷ அழைப்பு. ஆனால் இன்று வந்தவர் தமிழ் வாத்தியார் ராமசாமி!காளியம்மா பாட்டிக்கு ஓரளவு புரிந்து விட்டது.
‘வாத்தியார் பொண்ணுக்கும் தலையாரி பையனுக்கும் கல்யாணம் போல... அதான் வந்து கூப்பிடுறாங்க...’அந்த நாளும் வந்தது. ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு பாட்டியை அழைத்துப் போகிறார்கள்.‘வாத்தியார் பொண்ணு கல்யாணமில்ல... அதான் பள்ளிக்கூடத்துல விருந்து வைக்கிறாங்க போல...’ என்று மனதுக்குள் நினைத்த காளியம்மா பாட்டியின் சிந்தனை தெளிவாக இருந்தது.
வகுப்பறைக்குள் தூக்கிச் செல்லும் போது ஒருவன் பாட்டியின் காதில் ஓதினான்.
“ஏலே கிழவி! சொன்ன மாதிரி நாங்கதான் உன்னை தூக்கியாந்தோம். அதனால எங்க தலைவரு நிக்கிற பானைச் சின்னத்தைப் பாத்து ஓட்டைக் குத்திப்புடு... மறந்திடாதே பாட்டி...”
ஆக்கம்: மால்கம்
பதிவு : உங்கள் ‘புகழன்’

5 comments:

gundumama said...

nice story.... good & surprising end :D

Keep Blogging :)

புகழன் said...

தங்கள் வருகைக்கு நன்றி

தொடர்ந்து படியுங்கள்

Divya said...

Nice & realistic!!

cheena (சீனா) said...

எதிர் பாராத முடிவு - திருப்பமெனில் இது தான் - நண்பர் மால்கம் புத்த்கங்கள் எழுதி உள்ளாரா

புகழன் said...

//
cheena (சீனா) said...
எதிர் பாராத முடிவு - திருப்பமெனில் இது தான் - நண்பர் மால்கம் புத்த்கங்கள் எழுதி உள்ளாரா
//

நண்பர் மால்கம் புத்தகம் ஏதும் எழுதவி்ல்லை.
நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறார்.