Saturday, November 26, 2011

பாலை - ஈழம் - தேசியம்: நம்ம தலைவர் பிரபாகரன் இருக்காரா இல்லையா?

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவுலகில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறேன்.
முகநூலில் தொடர்ந்து நண்பர்களுடன் தொடர்பில் இருந்தாலும் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் முகநூலிலேயே எழுதிவிடுகிறேன.
உடனுக்குடனான எதிர்வினைகளை அங்கே காண முடியும் என்பதால்.

முகநூல் வழியாக பாலை திரைப்படம் பற்றியும் அதன் இயக்குநர் செந்தமிழன் பற்றியும் அறிந்தேன். அவரின் கோரிக்கை கடிதத்தையும் படித்தேன்.
அப்பொழுதே முடிவு செய்தேன். திரைஅரங்கு சென்றுதான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று. (இதுவரை நாமல்லாம் தியேட்டர் பக்கமே போரதில்லை. எல்லாமே டி.வி.டி.லதான்.)

கூட்டம் குறைவாக இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு குறைவாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.

பேஸ்புக்கிலும், பிளாக்கிலும் இன்னபிற இணைய தளங்களிலும் இப்படத்தைப் பற்றி பாராட்டுபவர்கள், வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தவர்கள் இவர்களெல்லாம் வந்திருந்தால்கூட கொஞ்சமாவது கூட்டமாகத் தெரிந்திருக்கும். இவர்களை மட்டுமாவது நம்பித்தான் இயக்குனர் இப்படத்திற்கென பிளாக் எல்லாம் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

நேற்றிரவு நான் சென்ற காட்சியில் வெறும் 15 பேர்தான் இருந்திருப்பார்கள்.

அதில் ஒரு 6 பேர் இடைவேளை விட்டதுகூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
(இது சரித்திரப் படம், வழமையான ஹீரோயிஸப் படங்களிலிருந்து வேறுபட்டது எனத் தெரியும்ல. பின்ன என்ன ......க்குடா தியேட்டருக்கு வந்தீங்க.) இவனுங்க வுட்ட குறட்டையில சில நல்ல வசனங்களைக் கேட்க
முடியாமல் போய்விட்டது.

படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததும் இணையத்தில் தேடினேன். பாலை பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா என்று... ப்ரீவியு ஷோ பார்த்தவர்கள் மட்டுமே எழுதியிருந்தார்கள். ஒரு சில பிளாக்குகளில் இயக்குநரின் கடிதம் மீள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஒரு படம் விடாமல் முதல் நாளிலேயே பார்த்து பதிவெழுதி விமர்சிக்கும் எந்தப் பதிவரும் இதுவரை பாலையைப் பார்க்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஒரு வேளை அவர்களெல்லாம் “மயக்கம் என்ன” பார்க்கப் போயிருப்பார்கள்.

படம் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஏன்னா எனக்கு சினிமா பற்றியும் தெரியாது, பாலை பற்றியும் தெரியாது, ஈழம் பற்றியும் தெரியாது, தேசியம் பற்றியும் தெரியாது.

(பின்ன ஏன்டா பதிவு எழுதுன. தலைப்பு இப்படி வச்சிருக்க வெண்ண என யாரும் திட்டக் கூடாது.)

படம் ரெம்பப் பிடித்திருந்தது.
படத்தை ரெம்பவே மெதுவாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். ஒரு மணி நேரத்தில் முடித்துவிடலாம். ஆனால் 2 மணி நேரம் படம் ஓடுகிறது. இன்னும் கொஞ்சம் விருவிருப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒருவேளை யதார்த்தமாக படம் எடுத்திருப்பதால் இப்படித்தான் எடுக்க முடியுமோ என்னவோ.

தன் இருப்பிற்கான போராட்டம் பற்றிய கதை. இதன் நீட்சியே தேசியம், தமிழ்
தேசியம், ஈழதேசியம்.
எனவேதான் ஈழ சூழ்நிலையை இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னான நிகழ்வில் கலந்து சொல்லியிருக்கிறார்.

அவங்க சிங்கம் நாமெல்லாம் புலி என்று சிங்கம் புலிக்கான (சிங்களவர் - விடுதலைப்புலிகளுக்கான) விளக்கத்தை விருத்திரன் கூறுவதிலிருந்து ஈழ வாசம் தொடர்கிறது.

அடுத்தவனை அடிச்சுதான் நாம வாழனும் என்று நினைக்காத தலைவர் கிடைப்பது அபூர்வம். தன் இனத்து இளைஞர்கள் செய்த சிறுதவறுதலால் நடந்த கொலைக்கு விருத்திரன் மன்னிப்புக் கேட்கும் காட்சி சூப்பர். (அவர் வருவார் என நாம எதிர்பார்த்து காத்துக்கிட்டுருக்கிற ‘தலைவர்(?) ’ உண்மையிலேயே இப்படில்லாம் நடந்துக்குவாரான்னு தெரியலை.)

போர் பாடம் நடத்தும் முதுவனின் விளக்கங்களுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். (ஒரு தடவை தியேட்டர்ல போய் பார்த்தாச்சு, நான் மட்டும் மறுபடியும் போய் தனியா உட்காந்து பார்த்தா அது நல்லாயிருக்காது. அதனால சிடி வரட்டும் மீண்டும் பார்த்துக்குறேன். இயக்குநர் மன்னிக்கவும்)

போரின் போது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட அவர்கள் நாசமாக்கப்படுவதை (அந்த வந்தேறிகள் அந்தக் கிழவியையும் விட்டுவைக்கவில்லை என்பதை) நாகரிகமாக காட்சிப்படுத்தியதற்கு இயக்குநருக்கு நன்றி. இதே வேற கமர்சியல் டைரக்டர்கள்லாம் சூப்பர் ரேப் சீன் வச்சு படத்தை A படமா ஆக்கியிருப்பாங்க.

முல்லைகுடி யாருக்கும் அடிமையில்லை, முல்லைக்குடிக்கு எந்த அடிமையும் தேவையில்லை என்ற முதுவனின் வார்த்தைகள் கவனிக்கத் தக்கவை. போரின் தொடர்ச்சி என்பது இல்லாமல் நிரந்தர தீர்வும் அமைதியும் ஏற்பட இதுவே வழி. கைதிகளும் பிணைக் கைதிகளுமே போரின் நீட்சிக்கு காரணம்.

நாம் இப்பொழுது வாழ்வதற்கு நம் முன்னோர்களின் போராட்டமே காரணம் என்ற வசனத்துடன் படம் முடிவடைகிறது.

தமிழினத் தலைவர் (?) பிரபாகரன் கொல்லப்பட்டாரா இல்லை உயிருடன் இருக்கிறாரா என்ற விவாதத்திற்குள் சென்றும்கூட அதற்கு ஒரு சார்பான முடிவுகளை இருதரப்பாருமே எடுத்துக் கொண்டிருக்கும் போது, எதுவுமே சொல்லாமல் அதை அதே நிலையிலேயே இயக்குநரும் விட்டு முல்லைக்குடி தலைவர் என்ன ஆனார் என்பதைச் சொல்லாமலேயே விட்டு விட்டார்.

“எங்க தலைவர் திரும்பி வருவாருடா” என்று யாரையும் வசனம் பேச வைக்கவில்லை. இது ஒன்றே எங்களுக்கு திருப்தி.

இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத தலைவரை எதிர்பார்த்து காத்திருப்பதைவிட இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த கட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைக் கையிலெடுத்து முன்னேற வேண்டும். அந்நேரம் முந்தைய வரலாற்றையும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்பதுதான் பாலை நமக்கு உணர்த்தும் பாடம்.

தியேட்டர்ல இருந்து தூக்குறதுக்குள்ள சீக்கிரம் போய் பாருங்க மக்களே!

3 comments:

Unknown said...

நன்றி நண்பரே..படத்தைப் பார்த்ததற்கும், விமர்சனத்திற்கும்.

Unknown said...

நன்றி நண்பரே..படத்தைப்பார்த்ததற்கும், விமர்சனத்திற்கும்..

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.