Tuesday, April 22, 2008

நீ எந்த ஊர் ஆப்பிள்?


பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்களைக் காட்டி
‘இது எந்த ஊர் ஆப்பி்ள்’
‘அது எந்த ஊர் ஆப்பிள்’ என்று
கேட்டுக் கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம்
ஒன்றுகூடி உன்னிடம் கேட்டன
‘நீ எந்த ஊர் ஆப்பிள்?’


- தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை புத்தகத்திலிருந்து

Thursday, April 17, 2008

கண் தெரியாத இருவர் எப்படிப் பேசுவார்கள்?

தகவல் தொடர்பு என்பது இன்று எவ்வளவோ முன்னேறி விட்ட காலம்.

புறா காலில் கடிதத்தை கட்டிவிட்ட காலம் ஒன்று இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி போஸ்ட் ஆபீஸ், தந்தி, தொலைபேசி, பேஜர், செல், ஈமெயில், வாய்ஸ் சாட்டிங், வீடியோ சாட்டிங் என தகவல் தொடர்பு இன்று எங்கோ போய் விட்டது.

ஆண்டிப்பட்டியில் உட்கார்ந்து கொண்டு ஆஸ்திரேலியாவிலிருக்கும் அண்ணனுடன் ஒருவன் நேருக்கு நேராகவே பார்த்துப் பேச முடியும்.

இவ்வளவு முன்னேறியதாலோ என்னவோ இன்று உள்ள தலைமுறையிடம் தகவல் தொடர்பில் பல communication Laps.

நவீன வசதிகள் இல்லாத இடங்களுக்கு சிலநேரங்களில் சிலர் மூலம் தகவல்களைச் சொல்லி அனுப்பும் போது அது அப்படியே நேர்மாறாக எப்படியெப்படியெல்லாமோ மாறி .... அப்பப்பா அதை நினைக்கையில் ரெம்பவே வருத்தமாக இருக்கிறது.

இப்படி மாறிச் சென்ற ஒரு சம்பவம் என் வாழ்க்கையிலும்...

என்னுடைய அப்பாவுடைய அண்ணன் (பெரியப்பா) இறந்து விட்டார்.
அவருடைய மகளுடைய மகன் கடையநல்லூர் அருகில் ஒரு கிராமத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இந்த மரணச் செய்தியை அறிவித்து அவரை உடனே எங்கள் ஊருக்கு வரச் சொல்ல வேண்டும்.

அந்த ஏரியா நாட் ரீச்சபிளி்ல் உள்ளது போல. எங்கள் அவசரம் தெரியாமல் நாங்கள் கால் பண்ணும் ஒவ்வொரு தடவையும் ஒரு லேடி எடுத்து ஏதேதோ ஆங்கிலத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

எப்படியாவது இன்னும் ஒரு மணி நேரத்தில் கூறினால்தான் அவர் உடனே புறப்பட்டு இறுதிச் சடங்குகள் முடியும் முன் எங்கள் ஊருக்கு வர முடியும் என்பதால் அருகில் உள்ள தென்காசியில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் (அங்கு எனக்கு நட்பு வட்டம் அதிகம்) சொல்லி அவரிடம் செய்தியைத் தெரிவிக்கச் சொன்னோம்.

அவர் அவருடைய நண்பரிடம் சொல்லி, அவர் இன்னொரு நண்பரிடம் கூறி, அவர் இன்னொரு நண்பரிடம் கூறி (இந்த மூன்றாமவரும் எனக்கு நண்பர்தான்) செய்தி சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் என் அக்கா மகன் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார்.(அவர் ஏற்கனவே ஏதேச்சையாக புறப்பட்டு விட்டதால்)

அதற்குள் எனக்கு போன் அந்த மூன்றாமவரிடமிருந்து...

“என்ன உங்க அப்பா இறந்துட்டாங்களாமே? நல்லாத்தானே இருந்தாங்க”

எனக்கு ஒரே குழப்பம். அவரிடம் விஷயத்தை கூறி முடிப்பதற்குள் லைனில் இன்னொரு போன். இப்படி போனுக்கு மேல் போன்.

திருநெல்வேலியிலிருந்து ஒரு நண்பன் எங்கள் ஊருக்கே வந்து விட்டான்.

“அடப்பாவி ஒரு போன் பண்ணிவிட்டு வந்திருக்கக் கூடாதா?“ என்றதற்கு
“அவசரத்தில் என்ன பண்ணணும்னே தெரியல அதான் கிளம்பி வந்துட்டேன்” என்று சொன்னான்.

இப்படி எங்கேயோ ஒரு சின்ன கம்யூனிகேஷன் லேப்ஸ் நடந்து பல பிரச்சினைகள் விளைந்து விடுகிறது.

என் பிரச்சினை ஒன்றும் அவ்வளவு பெரியதாக இல்லை.

சில நேரம் இதுபோன்ற தகவல் தொடர்புப் பிழைகள் மிகப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடும்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் தகவல் தொடர்புக்கு உண்டான முக்கிய அம்சங்களை நாம் சரியாகக் கடைப்பிடிப்பதி்ல்லை என்பது தான்.

தகவல் தொடர்பில் மிகவும் முக்கியமானது “சொல்லப்படும் விஷயங்களை முதலில் நன்றாக கவனிப்பது; அப்ஸர்வ் செய்வதுதான்.”

எவ்வளவு அவசரமாக இருந்தாலும் சரியாக கவனிக்காமல், அதனைக் கிரகிக்காமல் இருந்தால் அதனை வெளிப்படுத்தும் போது தவறு ஏற்படவே செய்யும். பொதுவாக நன்கு அப்ஸர்வ் செய்தாலே அவுட்புட்டில் 100% சரியாக வரும் என்று சொல்ல முடியாது.
அப்படியிருக்க inputலிலேயே மிஸ்டேக் என்றால்?

என் நண்பன் ஒருவனிடம் “டேய் பெரியமேடு அருகில் உள்ள ‘சூளை’யில் நடராஜா தியேட்டர் முன்பு வந்து நில். அரை மணி நேரத்தில் நான் அங்கு வந்து விடுகிறேன் என்று போனில் கூறினேன்.

“அரை மணி நேரம் கழித்து போன் வந்தது. டேய் இங்கே நடராஜா தியேட்டரே இல்லையே” என்றான்.
“ நீ எங்கே நிற்கிறாய் என்றேன் நான் சூளைமேட்டில்தான் இருக்கிறேன்.” என்றான்.
“நீ ஏன் சூளை மேட்டிற்கு போன?” என்றேன்.

“நீ தானே சொன்னாய் சூளைமேட்டிலுள்ள பெரிய பண்ணை மளிகை அருகில் நடராஜா தியேட்டர் முன்பு வா என்று” அவன் சொன்னான்

என்ன செய்வது டிரைவிங்கில் பேசும் போது பெரிய மேட்டில் உள்ள சூளை என்பது அவனுக்கு சூளைமேட்டிலுள்ள ஏதோ பெரிய என்று விளங்கி சூளைமேடு சென்று பெரிய பண்ணை மளிகை கண்ணில் படவும் அங்கே நடராஜா தியேட்டரைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறான்.

இப்படித்தான் என்னோட டீம்ல இந்தக் கம்யூனிகேஷன் ஸ்கில் பற்றிய விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது இது சம்பந்தமாக பல விஷயங்களைக் கூறி விட்டு நான் கேட்டேன்

“தகவல் தொடர்பு என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இரண்டு நபர்கள் பேசிக் கொள்வது கூட தகவல் தொடர்பு தானே.
உதாரணமாக நாம் எல்லோரும் சாதாரண சராசரி மனிதர்கள் எப்படிப் பேசுவோம்?”
(எல்லோரும் சாதாரணமாகத்தான் பேசுவோம் என்று முழித்துக் கொண்டிருந்தனர்.)

“சரி அப்ப கண் தெரியாத இருவர் சந்தித்துக் கொள்கின்றனர் அவர்கள் எப்படிப் பேசுவார்கள்? என்று கேட்டேன்.

உடனே எல்லோரும் (அதிகமானோர்) “சைகையால் பேசிக் கொள்வார்கள்” என்றனர்.
“ஏங்க எப்படிங்க சைகையால் பேசினால் எப்படி அவர்களுக்குத் தெரியும் அவர்களுக்குத்தான் கண் தெரியாதே என்றேன்.”
“அதான எப்படி தெரியும்” என்று சிறிது நேரம் யோசித்து விட்டு “அட அவங்களும் வாயாலதான் பேசுவாங்க” என்று கூறினர்.

இப்படித்தாங்க இன்றைய தலைமுறை இருக்கு.

அதனால பதிவுகளைப் படிக்கும் போது நன்றாகப் படித்து பிறகு கமென்ட்ஸ் கொடுக்கவும்.
இல்லையெனில் கண் தெரியாத இருவர் சைகையால் பேசியது போன்றுதான் இருக்கும்.

என்றும் மனதோடு மனதாய் உங்கள் புகழன்

Sunday, April 6, 2008

இழக்காமல் இழந்தது...

விதவிதமான மொபைல் வச்கிக்கிறதுக்கு எனக்கு ஆசையே கிடையாது. ஆனாலும் சைனா செட் புதிதாக வந்திருந்த சமயம் அது.
என் ஃபிரண்ட் தமீம் ஒரு செட் வச்சிருந்தான். செட் பெயர் NOKlA (இதை நீங்க எப்படி வாசிப்பீங்கன்னு பின்னூட்டத்துல சொல்லவும்)
அதை எடுத்து அடிக்கடி யூஸ் பண்ணுவேன். அதுல உள்ள வீடியோக்களை போட்டுப் போட்டு பார்த்துக்கிட்டு இருப்பேன்.
இதைப் பார்த்துட்டு டேய் கொஞ்ச நாளைக்கு நீயே இதை வெச்சுக்கோடான்னு எங்கிட்டயே கொடுத்துட்டு என்னோட ஓல்டு நோக்கியா 3310வை எடுத்துக்கிட்டான்.
பெருந்தன்மையா திருப்பிக் கேட்டகவே இல்லை.
அன்னைக்கு காலேஜுக்கு அதைக் கொண்டு போய் ஒரே ரவுசுதான்.
கிளாஸ் டைம் தவிர மத்த டைத்துல என்னேரமும் அதைக் கையிலயே வைச்சுக்கிட்டு திரிஞ்சேன்.
எங்கிட்ட உள்ள பெரிய கெட்ட பழக்கம் (சத்தியமா நம்புங்க எனக்கு தண்ணியடிக்கிறது, தம் அடிக்கிறது போன்ற பழக்கங்கள் எல்லாம் கிடையவே கிடையாது) கையில உள்ளதை பேசிக்கிட்டு இருக்கும் போது டேபிள் மேலேயே வைச்சிட்டுப் போயிருவேன். குறிப்பா மொபைல்.
எங்கப்பா அடிக்கடி என்னைத் திட்டுவார். மொபைலை டேபிள் மேலே வைக்காதே. எடுத்து பாக்கெட்டில் வை. எத்தனை தடவை சொன்னாலும் கேட்காமல் அப்படியே டேபிள் மேலேயே வைக்கிற பழக்கத்தை மட்டும் மாத்த முடியலை இன்னைக்கு வரைக்கும்.
அன்னைக்கும் இப்படித்தான் கையில வெச்சுக்கிட்டே அப்பல்லோல மருந்து வாங்கப் போனேன்.அப்படியே மொபைல மறந்து வைச்சிட்டுப் போயிட்டேன்.கடையை விட்டு ஒரு இருபதடி நடந்ததும்தான் மொபைலைக் காணோம்னு மண்டைல உதைத்தது.
வேகவேகமா திரும்பி அப்பல்லோக்குள்ள போனதும் அங்க ஒரு ‘குடிமகன்’ கையில என் மொபைல். சார் இந்தாங்க சார் உங்க மொபைல்னு எங்கிட்ட குடுத்தான்.... ஆனா குடுக்கல. ஙஅ மொபைலை மறந்து விட்டுட்டுப் போனதுக்கு ஃபைன் குடுங்க. நூறு ரூபாய் ஃபைன். என்ன சார் நான் சொல்றது சரிதான. இத நான் அப்படியே உங்கள்ட சொல்லாம இருந்திருந்தா உங்களுக்கு எவ்வளவு நஷ்டம்? பத்தாயிரம் ரூபாய் மொபைல விட்டுட்டுப் போறீங்கள்ள இத எடுத்துக் கொடுத்ததிருக்கேன். ஒரு நூறு ரூபாய் கொடுங்க நான் மொபைல தர்ரேன். (உண்மையிலேயே அந்த மொபைலோட ரேட்டு என்னன்னு எனக்கும் அப்ப தெரியாது. நானும் ரெம்ப அதிகமான விலைதான்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். பின்னாடிதான் அது 3000 ன்னு தெரிஞ்சது) அவர் என்னிடம் விளையாட ஆரம்பிச்சதும் எனக்கு என்ன பண்ணுறதுன்னே புரியல. பேசாம நூறு ரூபாயயைக் கொடுத்துரலாம்னு நெனச்சேன்.உள்ளுக்குள்ள அழுதாலும் வெளியில சிரிச்சிக்கிட்டே நின்னேன். தேறாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு சரி எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுங்கன்னு சொன்னார். சரி வாங்க வாங்கித் தர்ரேன்னு பக்க்ததுல உள்ள பேக்கிரிக்கு கூட்டிட்டுப் போனேன்.
என்ன வேணும்னு கேட்டதுக்கு நான் எதுவும் சாப்பிடல எனக்கு பப்ஸ் வாங்கித்தாங்க என் கூட 4 பேர் இருக்காங்க அவங்களுக்கும் சேர்த்து வாங்கித்தாங்கன்னு கேட்டார். சரி பத்தாயிரம் ரூபாய் மொபைலுக்கு ஒரு பத்து இருபது ரூபாய் செலவு பண்ணுறதுல தப்பே இல்லைன்னு வாங்கிக் கொடுத்தேன்.
இதெல்லாம் எனக்குப் பெரிசா தெரியல. ஆனா மொபைல அவரு திருப்பிக் கொடுத்ததுக்கு அப்புறமும் ஒரு அரை மணி நேரம் எங்கிட்ட வம்படியா பேசி அவராவே நன்றிய வாங்கிக்கிட்டாரு. ‘என்ன சார் நான் உங்கள்ட பப்ஸ் வாங்கிக் கேட்டதில தப்பில்லதான’ இதையே கிட்டத்தட்ட ஒரு நூறு தடவை சொல்லி என்னைய வெறுப்பேத்திட்டாரு. நம்ம குடிமகன்களோட பேச்சு எப்படி இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன். அன்னைக்குதான் முதல் தடவையா பார்த்தேன். இன்னும் அவரு அறுத்தது நிறைய. பேசாம மொபைல நீயே எடுத்துக்கிட்டு போயிருக்கலாம்னு சொல்லனும்னு தோனுச்சு
அதையெல்லாம் சொல்லி உங்களை அறுக்க வேணாம்னு இதோட நிறுத்திக்கிறேன்.
அப்புறம் மறக்காம பின்னூட்டத்துல நான் இழக்கமால் இழந்த மொலைல் பெயர் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா அறிவாளிங்களா!

இப்படிக்கு உங்கள் புகழன்

Friday, April 4, 2008

இன்பத்தைத் தேடி...

அவர் ஒரு கம்பெனிக்கு மானேஜர். அவருக்கு அழகான ஒரு பெண் பி.ஏ.வாக வேலைக்குச் சேர்ந்தாள். அந்தப் பெண்ணுக்குத் தன்னிடம் ஒரு மயக்கம் இருப்பதாக மானேஜர் நினைக்கிறார். அது உண்மையாக இருக்கக்கூடாதா என்று அவர் உளமாற விரும்புகிறார்.
தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி ஒருநாள் மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்குச் சந்தேகமே இல்லை. “இந்தப் பெண் என்னைப் பார்த்து மயங்கிவிட்டாள்....’ என்று இவர் உறுதியான நம்பிக்கையோடு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அன்றிரவே விருந்து சாப்பிடப் போகிறார்.
அந்தப் பெண்ணின் வீட்டில் யாருமே இல்லை. டைனிங் டேபிளில் மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிக்கிறது. அந்தப் பெண் தன் மீது மோகம் கொண்டிருக்கிறாள் என்பது நூறு சதவிகிதம் உறுதி என்று தனக்குத்தானே மீண்டும் ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இருவரும் விருந்து சாப்பிட உட்காருகிறார்கள். இரவு 11.30 மணி ஆகிறது. மானேஜரின் சந்தேகத்துக்குத் துளியும் இடமில்லை. ‘இவள் இன்று எனக்குத் தன்னையே கொடுக்கப் போகிறாள்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.
நள்ளிரவு 12.00 மணி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த அறைக்குப் போகலாம் என்று அந்தப் பெண் மானேஜரை அழைக்க... தான் அணிந்திருந்த கோட்டையும் சட்டையும் கழற்றிவிட்டு மானேஜர், அந்தப் பெண்ணின் பின்னே போகிறார். அந்த அறை இருட்டாக இருக்கிறது. ‘சரி, அவள் விளக்கைப் போடுவதற்கு முன்பே தயாராக இருக்கலாமே...’ என்று மிச்சமிருந்த அனைத்து உடைகளையும் மானேஜர் கழற்றிவிடுகிறார்.
அப்போது சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு அடிக்க... இருட்டைக் கிழித்துக் கொண்டு அந்த அறையில் விளக்குகள் பளிச்சென்று உயிர் பெருகின்றன. அந்த அறை முழுவதும் இவரின் ஆபீஸில் பணிபுரியும் எல்லா ஊழியர்களும் ‘ஹேப்பி பர்த்டே’ என்று கைதட்டிப் பாட்டுப் பாட ஆரம்பிக்கிறார்கள். மானேஜரோ, பர்த்டே என்று நிஜமாகவே பிறந்த மேனியுடன் அசடு வழிய நின்றிருக்கிறார்.
தனது பிறந்த நாளையே மறந்து அந்தப் பெண்ணின் பின்னால் சென்ற அந்த மானேஜரைப் போலத்தான் நாமும் பல சமயம் இன்பத்தை நமக்கு வெளியிலேயே தேடிக் கொண்டிருக்கிறோம்.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற நூலில் படித்தது.
இப்படிக்கு உங்கள் புகழன்